

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் மீது கடந்த 23-ஆம் தேதி அன்று காவல்துறை நடத்திய வன்முறை தாக்குதல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கக் கோரிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்கள். அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தின் முடிவில் காவல்துறை கடந்த 23-ஆம் தேதி அன்று கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது.
இந்த கொடூர தாக்குதல் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கக் உத்தரவிடக் கோரி திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தற்போது இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் அறிவித்தார்.
எனவே ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவானது விலக்கி கொள்ளப்பட்டதாக கருதி தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வானது இன்று வாய்மொழியாக தெரிவித்தது.
கலவரம் தொடர்பான வீடியோ காட்சிகளை இன்று நீதிமன்றத்தில் ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த பொழுது, ' ஏற்கனவே தமிழக அரசு இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து விட்டது. எனவே நாங்கள் விசாரணை எதுவும் நடத்தப் போவதில்லை. நீங்கள் என்ன ஆதாரங்கள் வைத்திருந்தாலும் அதை நேராக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.