ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை: ரிச்சர்டு பீலே

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்று லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே கூறினார்.

News image
செய்தியாளர்கள் சந்திப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து விவரித்த லண்டனைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்டு பீல் (இடமிருந்து 3-ஆவது). உடன் டாக்டர்கள் சுதா சேஷய்யன், பாபு ஆபிரஹாம்
Updated On :7 பிப்ரவரி 2017, 3:16 am

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்று லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே கூறினார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே, அப்பல்லோ மருத்துவர் பாபு ஆபிரஹாம், சிகிச்சைக்கான ஒருங்கிணைப்பாளராக தமிழக அரசின் சார்பில் செயல்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பாலாஜி, ஜெயலலிதா இறந்த பின்னர் உடலை பதப்படுத்தும் மருத்துவ நடைமுறையை மேற்கொண்ட சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறுஇயல் துறையின் இயக்குநர் சுதா சேஷய்யன் ஆகியோர் சென்னையில் திங்கள்கிழமை கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது:
ஜெயலலிதாவின் மரணத்தில் எந்தவித மர்மமும் இல்லை. அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை தேறி வந்த நிலையில், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
பல்வேறு வதந்திகள் நிலவி வரும் நிலையில், சிகிச்சை தொடர்பான விவரங்களைத் தெரிவிப்பதற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்ததன் காரணமாக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் அழுத்தம் காரணம் இல்லை.
2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில், மயக்கத்துடன் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், பாக்டீரியா தொற்றின் காரணமாக ரத்தத்தில் நச்சேற்றம் ("செப்ஸிஸ்') இருப்பது கண்டறியப்பட்டது. சர்க்கரை நோய் (அதிக ரத்த சர்க்கரை அளவு), உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் ரத்தத்தில் காணப்பட்ட நச்சானது வேகமாக பரவக் கூடிய வாய்ப்பு இருந்தது.
10 நாள்கள் தூக்கத்துக்கான மருந்துகள்: அவருக்கு சுவாசத்தைச் சீராக்கும் அறுவைச் சிகிச்சை ("டிரக்ஸ்யாஸ்டமி') செய்யப்பட்டு, கழுத்தில் குழாய் பொருத்தப்பட்டது. பல்வேறு வலி மிகுந்த சிகிச்சைகள், மருத்துவ செயல்முறைகள் காரணமாக அவருக்கு 10 நாள்கள் தூக்கத்துக்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன. பலகட்ட சிகிச்சைகளுக்குப் பின்பு அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது.
தயிர் சாதம் சாப்பிட்டார்: உடலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக அவர் படுக்கையிலிருந்து எழுந்தார். மருத்துவர்களின் கேள்விகளுக்கு "ஆம்', "இல்லை' என்று பதில் அளிக்கும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தயிர் சாதம் போன்ற உணவுகளை உட்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இயன்முறை மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரவு உறங்கும் சமயத்தில் மட்டுமே வென்டிலேட்டர் கருவியின் உதவி தேவைப்பட்டது. மற்ற நேரங்களில் அவர் தாமாகவே சுவாசித்தார்.
ஆளுநருக்கு "தம்ப்ஸ் அப்': ஆளுநர் (பொறுப்பு) சி.எச்.வித்யா சாகர் ராவ் 2 முறை மருத்துவமனைக்கு வந்தார். இரண்டாவது முறை சிகிச்சை அறையில் சென்று ஆளுநர் பார்த்தார். அப்போது அவருக்கு "தம்ப்ஸ் அப்' தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதா தனது கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.
திடீர் பின்னடைவு ஏன்? அவருக்கு அளித்த சிகிச்சையின்பயனாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி மாலையில் இயன்முறை சிகிச்சை முடிந்த பின்பு ஜெயலலிதா சோர்வாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத நிலையில், டாக்டர் ரமேஷ், மருத்துவக் குழுவினர் அறையில் இருந்தபோது அவர்கள் முன்னிலையிலேயே ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா இறுதியாகப் பேசியது என்ன? மாரடைப்பு ஏற்பட்டபோது அறையில் இருந்த ரமேஷிடம் தன்னால் சுவாசிக்க இயலவில்லை என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு மாரடைப்புக்கான சிகிச்சைகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
முன்பே இறக்கவில்லை: மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு சுவாசத்தை மீட்டெடுக்கும் அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இருதய செயல்பாட்டுக்கான ("எக்மோ') கருவி பொருத்தப்பட்டது. 24 மணி நேரத்துக்குப் பின்பும் அவரது இருதயம் செயல்படத் தொடங்கவில்லை. அந்தக் கருவி மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, அப்பல்லோ, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் உள்ளிட்டோரின் ஒப்புதலைப் பெற்று அவர் உயிரிழந்ததை அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில்தான் உயிரிழந்தார். முன்னதாகவே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை.
லண்டனுக்குச் செல்லாதது ஏன்? ஜெயலலிதாவை லண்டனுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும் திட்டம் குறித்து அவ்வப்போது விவாதிக்கப்பட்டது. ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவரை லண்டன் வரை கொண்டு செல்வது சிரமம் என்பதால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
புகைப்படம் வெளியிடவில்லை: பொதுவாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து புகைப்படம் வெளியிடுவது மரபு கிடையாது. லண்டன் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்படுவது இல்லை. சிகிச்சை அளிக்கப்பட்ட அறைகளில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படவில்லை. அதனால் அவர் சிகிச்சை பெற்றபோது ஆதாரங்கள் எதுவும் இல்லை.
ரூ.5.5 கோடி கட்டணம்: ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான கட்டணம் சுமார் ரூ.5.5 கோடி என்று தெரிவிக்கப்பட்டது. கட்டணம் குறித்த விவரங்கள், ரசீதுகள் உள்ளிட்டவை ஜெயலலிதாவின் குடும்பத்தாரிடம் அளிக்கப்பட்டுவிட்டன.
சசிகலா உடனிருந்தார்: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாள்களில் பெரும்பாலும் சசிகலா உடனிருந்து, சிறந்த முறையில் கவனித்தும், ஆதரவும் அளித்து வந்தார் என்றனர்.

"கால்கள் அகற்றப்படவில்லை'

சிகிச்சையின்போது ஜெய லலிதாவுக்கு கால்கள் அகற்றப்படவில்லை என்று மருத்துவர் பாலாஜி கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியது:
ஜெயலலிதாவுக்கு சிகிச்சையின்போது 2 கால்களும் அகற்றப்பட்டன என்று கூறப்படுவதில் உண்மையில்லை. அவருக்கு உடல் உறுப்புகளோ, கால்களோ அகற்றப்படவில்லை.
மேலும் உடல் உறுப்புகள் பழுதடைந்தால் மேற்கொள்ளப்படும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எதுவும் நடைபெறவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.