மக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ள கட்டில், பீரா, சோஃபா, மேஜை உள்ளிட்ட ஃ பர்னிச்சர் பொருட்களுக்கு 28 சதவீதம் சரக்கு சேவை வரி(ஜி.எஸ்.டி) விதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொழில் கடும் பாதிப்பைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் பொருள்களாக இருக்கும் இவற்றின் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஃபர்னிச்சர் உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஸ்டீல் மற்றும் மரச்சாமான்கள்( ஃபர்னிச்சர் ) தயாரிப்பு தொழிலில் 2,000 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், 2 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதில் இந்தத் தொழிலுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஃபர்னிச்சர் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், உள்நாட்டு தயாரிப்புப் பொருட்களை வாங்குவது குறைந்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மலிவான சீனத் தயாரிப்பு ஃபர்னிச்சர் பொருள்களை நோக்கி மக்கள் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
முன்பு, ஸ்டீல் மூலப் பொருள்கள் மீது உள்ளீடு வரி 5 சதவீதமும், மரச்சாமான்கள், சோஃபா உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீது உள்ளீடு வரி 14.5 சதவீதமும் விதிக்கப்பட்டது.
இந்த மூலப்பொருள்களை வைத்து, ஃபர்னிச்சர்கள் தயாரித்து வெளியே (விற்பனைக்கு) வரும்போது, வெளியீடு வரி அல்லது விற்பனை வரி அதே அளவு இருந்தது. ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) யில் உள்ளீடு வரி 18 சதவீதமாகவும், வெளியீடு வரி 28 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இதனால் ஃபர்னிச்சர் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. உதாரணமாக, 4 அடி கொண்ட ஸ்டீல் கட்டில் வரியுடன் சேர்ந்து ரூ.6,300 ஆக இருந்தது. இப்போது ஜி.எஸ்.டி.உடன் சேர்த்து ரூ7,680 ஆக உயர்ந்துள்ளது.
கட்டில், பீரோ விலை உயர்வு: ஜி.எஸ்.டி.}க்கு முன்பு, ஸ்டீல் பீரோ வரியுடன் சேர்ந்து ரூ.10,000}க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது இதன் விலை ஜி.எஸ்.டி.யுடன் 12,800 ஆக அதிகரித்துள்ளது. ரூ.20,000 ஆக இருந்த சோஃபா தற்போது ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.25,600 ஆக உயர்ந்துள்ளது. ஸ்டீல் மேஜை ரூ.4,500 இருந்து ரூ.5,500 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல, இருக்கை (சேர்) ரூ.2,000}இல் இருந்து ரூ.3,000 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய காலத்தில் மக்களின் அத்தியாவசியப் பொருள்களாக ஸ்டீல் மற்றும் மரச்சாமான் (ஃபர்னிச்சர்) பொருட்கள் விளங்குகின்றன. இவற்றின் விலை உயர்வால், மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கல்யாண வீட்டில் மணப்பெண்ணுக்கு சீதனமாக கொடுப்பதற்காக சேர், கட்டில், பீரோ, மேஜை உள்ளிட்ட பொருள்களை வாங்குவது வழக்கம். இப்போது ஜி.எஸ்.டி. காரணமாக இதற்கான செலவு அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மக்கள் ஒருபுறம் விலைச் சுமையை சந்திக்கும் நிலையில், இந்தத் தொழிலை செய்து வரும் பல சிறிய உற்பத்தி நிறுவனங்கள்(குடிசைத்தொழில்) தங்கள் தொழிலை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஃபர்னிச்சர் உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு ஃபர்னிச்சர் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத் தலைவர் ஜி.சந்தானபதி கூறியது:
சாதாரணமாக வீட்டில் கட்டில், பீரோ இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு அத்தியாவசிய தேவையாக ஃபர்னிச்சர் பொருள்கள் உள்ளன. இவற்றை ஆடம்பரப் பொருளாக கருதி, வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஃபர்னிச்சர் பொருள்கள் விலை உயர்ந்து, நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சுமை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, சிறிய குடிசைத் தொழில் செய்யும் சிறிய நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இத்தொழிலை காக்கவும், மக்கள் மீது விலை உயர்வு சுமையைக் குறைக்கவும் இவ்வரி உயர்வை குறைக்க வேண்டும் என்றார் அவர்.
உள்நாட்டு தொழில் முடங்கும்: தமிழ்நாடு மாடூலர் ஃபர்னிச்சர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் டி.மகேந்திரன் கூறும்போது, ''ஜி.எஸ்.டி. வரி காரணமாக உள்நாட்டு வியாபாரம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் தயாரிப்பும் திட்டத்தின் கீழ், இங்கு தயாரித்து மக்களுக்கு வழங்குகிறோம். ஆனால், ஜி.எஸ்.டி. உயர்வு காரணமாக, பர்னிச்சர் பொருள்களை மக்கள் வாங்குவது குறைய வாய்ப்பு உள்ளது.
அதேநேரத்தில், வெளிநாடுகளில் இருந்து ஃபர்னிச்சர் பொருள்கள் இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, சீனாவில் இருந்து மலிவான ஃபர்னிச்சர்கள் வரும் நிலை ஏற்படும். பன்னாட்டு நிறுவனங்கள் வருகை அதிகரித்து, உள்நாட்டு தொழில்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 28 சதவீதம் வரி உயர்வை குறைக்க வேண்டும் என்றார் அவர்.