தமிழகத்தில் மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களுக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது என்று மத்திய நிலக்கரி, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பியூஷ் கோயல் கூறினார்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயல்பாடுகள், மத்திய அரசின் மின்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி, துறைச் செயலர் விக்ரம் கபூர், மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.சாய்குமார் உள்ளிட்டோர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்பு அமைச்சர் பியூஷ் கோயல், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஓராண்டுக்கு முன்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து உதய் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டம் வெற்றிகரமாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2013- 14 - ஆம் ஆண்டில் ரூ.13,985 கோடியாக இருந்த தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன், உதய் திட்டத்தைச் செயல்படுத்தியதற்கு பின்பு 2016 - 17 - ஆம் ஆண்டில் ரூ.3,783 கோடியாக குறைந்துள்ளது.
ஜிஎஸ்டியினால் சேமிப்பு: ஜிஎஸ்டி அமல்படுத்திய பின்பு பலவகையான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால் நிலக்கரி கொள்முதல் வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி அமல்படுத்திய சில நாள்களிலேயே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ரூ.508.54 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
மின்மிகை மாநிலம்: தமிழகம் தற்போது மின்மிகை மாநிலம் என்ற நிலையை அடைந்துள்ளது. மின்சார பற்றாக்குறை தமிழகத்தில் அறவே இல்லை. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரம் பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மின்சார பகிர்மானத் திறனும் இரண்டு மடங்காக உயரும்.
விவசாய விளைநிலங்களில் சூரிய மின்சக்தியின் மூலம் தண்ணீர் இறைக்கும் பம்புகளை இயக்கும் திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.
செய்யூரில் 4 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைய உள்ளது. இந்த அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரி தமிழகத்தில் அமைந்து வரும் நிலக்கரி சுரங்கத்தில் இருந்தே அளிக்கப்படும். இதன் மூலம் நிலக்கரிக்கான செலவு கணிசமாகக் குறையும். மேலும், மாநிலத்துக்கு வெளியே நிலக்கரி வாங்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.
மின்சாரத்தைச் சேமிக்கும் திட்டங்களுக்காக எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம் கோடி தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது. நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கு குறைந்த விலையில், தரமான மின்சாரத்தைக் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
அடுத்த நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இங்கு தெரிவித்துள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டிலேயே ரூ.2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் வகையில் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் அடுத்த நிதியாண்டில் ரூ. 6 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்ட முடியும்.
மின் கட்டணங்களைக் குறைப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை. இருப்பினும் தற்போது அமலில் உள்ள கட்டணம் அதிகரிக்காமல் இருக்க நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழகத்துக்கு மட்டும் கூடங்குளம் மின்சாரம்?
கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கே வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கூடங்குளத்தில் 3 மற்றும் 4 - ஆம் அணு உலைகளில் உற்பத்தி செய்யப்பட உள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்தின் பயன்பாட்டுக்கே அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது நியாயமான கோரிக்கைதான். கூடங்குளத்தில் இருந்து பெறப்படும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கே அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
மேலும், அணுமின்நிலையம் அமைப்பதற்கு அனுமதிக்காத மாநிலங்களுக்கு, அணுமின் நிலையத்தில் இருந்து பெறப்படும் மின்சாரமும் அளிக்கப்படமாட்டாது என்றார் அமைச்சர்.