குடியரசுத் தலைவர் தேர்தல்: அதிமுக அம்மா அணி எம்.பி.க்களுடன் முதல்வர் ஆலோசனை
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, அதிமுக அம்மா அணி எம்.பி.க்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.


குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, அதிமுக அம்மா அணி எம்.பி.க்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் மாலை 4.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக அம்மா அணியில் உள்ள 36 எம்.பி.,க்களில் சுமார் 30 பேர் வரை கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு, அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதுபோல, தமிழ் மக்களின், மாநிலத்தில் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக அம்மா அணி எடுத்த முடிவையொட்டி எம்.பி.க்கள் முறையாக வாக்களிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். வரும் 16- ஆம் தேதியன்றே அனைத்து எம்.பி.க்களும் தில்லிக்குச் சென்றுவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அனைவரும் கவனக்குறைவு இல்லாமல் முறையாக வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஜி.எஸ்.டி.யால் தமிழக மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை மத்திய அரசின் கவனத்துக்கு எம்.பி.க்கள் கொண்டு வரலாம் என்று அறிவுறுத்தினார்.
மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் தமிழக மக்களுக்கு விரோதமாக இருந்தால் அதை எதிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார். நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது சட்டமாவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் அவசியம். அரசு அதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து 2 ஆண்டுகளுக்கு விலக்கு கேட்டபோது, ஒரு ஆண்டுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, பிடிவாதத்தை மத்திய அரசு தளர்த்தவில்லை.
மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவின்படி குடியரசுத் தலைவர் அதில் கையெழுத்திட வேண்டும். அதில் மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. எனவே, எங்கள் தரப்பில் எந்தக் குறைபாடும் இல்லை. இதில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறோம்.
அதிமுக எதிர்ப்பு: முன்சீப், மாஜிஸ்திரேட் பதவிக்கு மேற்பட்ட நீதிபதி பணியிடங்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக நடந்த மத்திய நீதித்துறை கூட்டத்தில் கலந்து கொண்டு நான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். சட்டத்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல் ஒரே முறையில் படித்து முடிப்பது அல்ல. சட்டம் என்பது தொடர்ந்து படித்து அறிந்து வரும் ஒன்று என்பதால் அதில் தேர்வு வைப்பதை எதிர்த்திருக்கிறோம் என்றார் நவநீதகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...