

ராமேசுவரம்: ராமாயணத்தால் புகழ்பெற்றது போல அப்துல் கலாமால் ராமேசுவரம் மீண்டும் புகழ்பெற்றுள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினமான இன்று, ராமேசுவரம் பேக்கரும்பில் கட்டப்பட்ட அவரது மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ராமேசுவரத்தின் மண்டபம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு, அப்துல்கலாமுக்கு புகழாரம் சூட்டினார்.
அவரைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்துல்கலாமின் மணிமண்டபத்தை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
மேலும், ராமேசுவரத்தில் அப்துல்கலாமுக்கு மணிமண்டபம் அமைக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. அப்துல் கலாம் பெயரில் ரூ.5 லட்சம் மதிப்பில் விருது அறிவித்து கலாமுக்கு பெருமை சேர்ந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தமிழர்களின் பிரச்னையைத் தீர்க்கக் கட்சத்தீவை மீட்டுத்தாருங்கள் என்று வலியுறுத்தி வந்தவர் ஜெயலலிதா என்றும் பழனிசாமி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.