மக்களை அச்சுறுத்தும் நெடுஞ்சாலை விபத்துகள்!
தமிழகத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வரும் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


தமிழகத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வரும் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் காஞ்சிபுரம் முதலிடத்திலும், விழுப்புரம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இவ்விரு மாவட்டங்களில் அதிக தொலைவைக் கடந்து செல்லும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை ஆகிய இரு சாலைகளில்தான் விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் அருகே ஓங்கூர் தொடங்கி கூத்தக்குடி வரை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை 110 கி.மீ. தொலைவு நீள்கிறது. மேலும், சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலை, சென்னை-புதுவை கிழக்கு கடற்கரைச் சாலை, மாநில நெடுஞ்சாலைகள் என 1000 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலையைக் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 3,500 விபத்துகளில் 800 பேர் வரை உயிரிழக்கின்றனர்.
6 மாதங்களில் 435 பேர் உயிரிழப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு ஜூன் மாதம் வரையான 6 மாத காலத்தில் 1,987 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 398 பெரிய விபத்துகளில் 435 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் ஜானகிபுரம் புறவழிச்சாலை சந்திப்பு, எல்லீஸ் சத்திரம் சாலை சந்திப்பு, திருவாமாத்தூர், விராட்டிக்குப்பம், முத்தாம்பாளையம், அய்யூர் அகரம், சிந்தாமணி மேம்பாலம் சந்திப்புகளும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி சந்திப்பு, முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை தரைப்பால சந்திப்பு, வி.சாத்தனூர், விக்கிரவாண்டி பேருந்துநிலையம், பேரூராட்சி அலுவலகம், சித்தனி, பேரணி சந்திப்பு, பிரதான கூட்டேரிப்பட்டு நான்குமுனைச் சாலை சந்திப்பு உள்ளிட்ட 27 இடங்கள் தொடர் விபத்துப் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
விபத்துக்கு காரணம்: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையைப் பொருத்தவரை, விபத்துகளை தடுக்கும் பொருட்டு கடந்த 2008-ஆம் ஆண்டில் விரிவான, விரைவான நான்கு வழிச்சாலை வசதியை ஏற்படுத்திய போதிலும் விழுப்புரம் மாவட்டப் பகுதியில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
தேசிய நெடுஞ்சாலையில் இலகு ரக வாகனங்களுக்கு 80 கி.மீ. வேகமும், கனரக வாகனங்களுக்கு 60 கி.மீ. வேகமும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால், 140 கி.மீ. வேகம் வரை வாகனங்கள் இயக்கப்படுவதால், சாலைக் குறுக்கிடும் இடங்களில் விபத்துகள் நேரிடுகின்றன.
மேலும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இடதுபுறம் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், இவை வலது, இடதுபுறாக விதிகளை மீறிச் செல்வதால், அதிவேகமாக கடந்து செல்ல முயலும் கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மீது மோதி விபத்துகளை சந்திக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் அணுகு சாலையில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும். ஆனால், நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதாலும் விபத்துகள் நேரிடுகின்றன.
தடுப்பு நடவடிக்கை அவசியம்: பெருகி வரும் விபத்துகளை தடுப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அதிக விபத்துகள் நிகழும் விழுப்புரம் மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளை பெயரளவில் அல்லாமல் தீவிரமாக கடைப்பிடிப்பது அவசியம். குறிப்பாக, விபத்து அபாய சந்திப்புகளில் தெர்மோபிளாஸ்ட் வண்ணப்பூச்சுகள், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் சிறிய அதிர்வு தொடர் வேகத்தடைகள், பெரும் விபத்துகள் நிகழும் சந்திப்புகளில் தடுப்புக் கட்டைகள், சூரியஒளி பிரதிபலிப்பான்கள், தேசிய நெடுஞ்சாலையோடு இணையும் பக்கவாட்டுச் சாலைகளில் இரட்டை வேகத்தடைகளை அமைப்பதன் மூலம் விபத்துகளை தடுக்க இயலும்.
மேலும், வேகத்தின் அளவு குறித்த எச்சரிக்கைப் பலகைகள் வைக்க வேண்டும். அதிவேக வாகனங்களை கட்டுப்படுத்த வட்டார போக்குவரத்துத் துறையினர் வேக அளவீடு (ஸ்பீடு கன்) கருவியை தீவிர பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
சுங்கச் சாவடிகளில் வேகத்தை மீறி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். 40 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச் சாவடி உள்ளதால், அதிவேகத்தில் வரும் வாகனங்களை கண்டறிந்து, தானியங்கியாகவே அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கொண்டுவர வேண்டும். இதுபோன்ற விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசர அவசியம் என்கின்றனர். இது தொடர்பாக, வட்டார போக்குவரத்து அதிகாரி பாலகுருநாதனிடம் கேட்டபோது, விழுப்புரம் மாவட்டத்தில் நான்குவழிச் சாலையை பராமரிக்கும் நிறுவனங்களிடம், விபத்து இடங்களை கோடிட்டு விளக்கப் படத்துடன் கொடுத்துள்ளோம். அவர்கள் விபத்துத் தடுப்புக்கு பேரிகார்டு, ரப்பர் வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...