சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னை சில்க்ஸ் தீ விபத்து: ரூ.420 கோடி மதிப்பு பொருள்கள் நாசம்

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கடையில் இருந்த ரூ.420 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News image
சென்னை தியாகராய நகரில் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இடிந்து விழுந்த கட்டடப் பகுதிகள்.
Updated On :29 ஜனவரி 2024, 2:39 pm

DIN

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கடையில் இருந்த ரூ.420 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தீவிபத்தில் கட்டடத்தின் 4 தளங்கள் இடிந்து விழுந்தன.
இது குறித்த விவரம்: தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் தியாகராயநகர், கிண்டி, சைதாப்பேட்டை, அசோக்நகர், எழும்பூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் தரைக்கு கீழே உள்ள தளத்தில் பிடித்த தீ வேகமாக அடுத்தடுத்த தளங்களில் பரவியது. இதனால் தீயை அணைக்க சென்னை முழுவதிலும் இருந்தும், காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவண்ணாமலை, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள், அங்கு வரவழைக்கப்பட்டனர். சுமார் 200 தீயணைப்பு படை வீரர்கள் 20 தீயணைப்பு வண்டிகளோடும், 2 ஸ்கை லிப்ட் வாகனத்தோடும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சுமார் 50 குடிநீர் வாரிய லாரிகள், தீயை அணைக்க தண்ணீர் விநியோகம் செய்தன.
அதேவேளையில் கட்டடத்தில் இருந்து அதிகளவு புகை வெளியேறியதாலும், அதிகளவு வெப்பம் இருந்ததாலும் தீயை அணைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கட்டடத்தின் பின்பகுதியிலும், முன்பகுதியிலும் மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள் மூலம் துளையிடப்பட்டு, புகை வெளியேற்றப்பட்டது. புகை அதிகளவு வெளியேறியதால் தியாகராயநகர் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் தியாகராயநகர் பகுதி மக்கள் கண் எரிச்சலினாலும், மூச்சுத் திணறலாலும் மிகவும் அவதியடைந்தனர்.
30 மணி நேர போராட்டம்: இதற்கிடையே தீ வேறு கட்டடத்துக்கு பரவாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை தீயணைப்புத்துறையினர் எடுத்தனர். ஆனால், கட்டடத்துக்குள் இருந்த தீயை அணைப்பதற்கு தீயணைப்புத்துறையினர் திணறினர்.
அனைத்து தளங்களில் இருந்த பொருள்களும் ஒரே நேரத்தில் தீ பிடித்து எரிந்ததால், தீயை அவர்களால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதிகளவு வெப்பத்தின் காரணமாக, கடையின் முன் சுவர் புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இரவு முழுவதும் அந்தக் கட்டடத்தில் இருந்து புகை வெளியேறியதினால், தியாகராயநகர் பகுதி கரும்புகையால் சூழ்ந்திருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் 4, 5, 6, 7 தளங்களின் மையப் பகுதி பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இதனால் தீயணைப்புப் படை வீரர்கள், சிறிது நேரம் தீயணைக்கும் பணியை நிறுத்தினர். சுமார் அரைமணி நேரத்துக்கு பின்னர் தீயணைப்பு பணியை அவர்கள் மீண்டும் தொடங்கினர். அனைத்து தளங்களிலும் தீ கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில்,காலை 7.20 மணியளவில் இரண்டாவது தளம் திடீரென பயங்கரமாக தீப் பிடித்து எரிந்தது.
இந்த தீயை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து அணைத்தனர். காலை 8 மணிக்கு தீ பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இதன் பின்னர், தீயணைப்பு படை வீரர்கள், கட்டடத்தை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டனர். இப் பணி காலை 10 மணி வரை நடைபெற்றது. இதன் பின்னர், கட்டடத்தை இடிக்க முடிவு செய்ததாலும், கட்டடத்தில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டதாலும் தீயணைப்பு பணி நிறுத்தப்பட்டது.
இரு நாள்களாக எரிந்த தீயை தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 30 மணி நேர நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அணைத்தனர். இதன் பின்னர் கட்டடத்தை இடிப்பதற்கு பொதுப்பணித்துறை, மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தத் தொடங்கினர்.
இதற்கிடையே மாலை 6.45 மணியளவில் நான்காவது தளத்தில் உட்பகுதி திடீரென தீப் பிடித்து எரிந்ததினால், பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.420 கோடி பொருள்கள்: தீ விபத்து குறித்து சென்னை சில்க்ஸ் மேலாளர் ரவீந்திரன், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தீ விபத்து தொடர்பான விசாரணையில் போலீஸார் ஈடுபட்டனர்.
விசாரணையில், அந்தக் கடையில் நகைகளை தவிர்த்து ரூ.420 கோடி மதிப்பிலான பொருள்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த பொருள்கள் அனைத்துமே தீ விபத்தில் எரிந்து நாசமாகிவிட்டது. அதேபோல நகைக் கடையில் இருந்த 400 கிலோ தங்கநகைகள், அங்குள்ள பாதுகாப்பு பெட்டக்கத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதில் நகைக் கடையில் அலங்கார அலமாரியில் இருந்த சுமார் ஆயிரம் கிலோ வெள்ளி நகைகள், பாத்திரங்கள் உருகி இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமைச்சர்கள், அதிகாரிகள்: தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இரண்டாவது நாளாகவும் நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதேபோல சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அ.கா.விசுவநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புநாதன், தீயணைப்புத்துறை இயக்குநர் டி.ஜி.பி.எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு, கட்டடத்தை இடிப்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இரண்டாவது நாளாக வணிகம் பாதிப்பு: கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால், உஸ்மான் சாலை பகுதியில் இரண்டாவது நாளாகவும் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் அங்கு முற்றிலும் வணிகம் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக வேலைக்கு வந்த அங்குள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
அதேபோல இரண்டாவது நாளாகவும் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டதால், தியாகராயநகர் பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. தீ விபத்தின் காரணமாக ரங்கநாதன் தெருவிலும் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. உஸ்மான் சாலை பகுதி முழுவதும் சுமார் ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.