வைர விழா நாயகன்!
இன்று அகவை 94 காணும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக வைர விழா கொண்டாடுகிறார்


இன்று அகவை 94 காணும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக வைர விழா கொண்டாடுகிறார். தமது 34-ஆவது வயதில் 1957-இல் தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினராகக் குளித்தலைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மு. கருணாநிதி ஒருவர்தான் தொடர்ந்து இன்றுவரை அமைந்த எல்லா சட்டப்பேரவைகளிலும் உறுப்பினராக இருந்து சரித்திரம் படைத்தவர்.
சட்டப்பேரவைக்குள் சென்ற முதல் அனுபவம், பந்தயக் குதிரையைப் படைவீரர்கள் அணி வகுப்பில் நிறுத்தியதுபோல இருந்தது என்று கருணாநிதி பிற்காலத்தில் கூறினார்.
1957-இல் குளித்தலை தொகுதியில் முதல்முறையாக வெற்றி பெற்று சென்றது முதல் 2016- திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று பணியாற்றியது வரையிலான கருணாநிதியின் 60 ஆண்டு பணிகள் குதிரை பாய்ச்சலிலேயே இருந்து வந்துள்ளது.
60 ஆண்டு கால சட்டப்பேரவை பணிகளில் ஏறக்குறைய சரி பாதியாக ஆளும்கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் அவர் இருந்து பணியாற்றியுள்ளார். இதில் ஆளும்கட்சி வரிசையில் இருந்த காலத்தையும்விட, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காலத்திலேயே கருணாநிதியின் உரை அக்னியாக இருந்துள்ளது.
குறிப்பாக, முதல்வராக எம்ஜிஆர் இருந்த 13 ஆண்டுகளில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியே ஆளும் கட்சியை இயக்கும் அச்சாணியாகத் திகழ்ந்துள்ளார்.
சைகை மொழி: சட்டப்பேரவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும்போது, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பார்வை முழுவதும் கருணாநிதியின் பக்கமே இருக்கும். கருணாநிதி தலையைக் கைகளில் சாய்த்து அமைதியாக உட்கார்ந்திருப்பார். திடீரென ஒரு விரலை கருணாநிதி அசைத்தால் துரைமுருகன் எழுந்து, அதிமுக உறுப்பினரின் பேச்சுக்குத் தக்க பதிலடி கொடுப்பார். இரண்டாம் விரலை அசைத்தால் ரகுமான்கான் எழுந்து முழங்குவார். கருணாநிதியே தலையைத் தட்டிக் கொண்டால் அவையை விட்டு வெளிநடப்புச் செய்வர். சைகையாலேயே எதிர்க்கட்சியையும் ஆளும்கட்சியையும் இயக்கக்கூடியவராக இருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கருணாநிதி பேசியதில் பல்கேரியா பால்டிகா ஊழல் தொடர்பாக பேசிய பேச்சே சிறப்பு வாய்ந்தது.
கப்பல் வாங்குவது நிறுத்தம்: பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் கப்பல் வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று குற்றச்சாட்டு எழுப்பி, அதற்கான 20 ஆதாரங்களை பேரவை முன் வைத்து கருணாநிதி பேசினார். ஒவ்வொரு ஆதாரமாக அவை முன் வைத்தபோது அவையே அதிர்ந்தது.
முதல்வராக இருந்த எம்ஜிஆர் எழுந்து, பலவீனமான நிர்வாகம் என்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் வைக்கும் ஆதாரங்கள்தான் சான்று என்று வேதனையுடன் குறிப்பிட்டதுடன், கப்பல் வாங்கும் முடிவையும் கைவிட்டார்.
முருகனைக் காணவில்லை: திருச்செந்தூர் கோயிலில் நடைபெற்ற கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கை மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் திருச்செந்தூர் கோயிலில் வைரவேல் காணாமல் போனதைக் கண்டித்தும் கருணாநிதி நடைப்பயணம் சென்றார்.
அதற்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் ஹண் டே பேசும்போது, ''கருணாநிதி திருச்செந்தூர் போனார். அவரைப் பார்க்கப் பிடிக்காமல் முருகன் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்டார்'' என்றார்.
அப்போது கருணாநிதி எழுந்து, ''இதுவரை வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிகிறது முருகன் சிலையும் காணாமல் போய்விட்டது'' என்று குறிப்பிட்டதும் முதலில் சிரித்தவர் முதல்வராக இருந்த எம்ஜிஆர்தான்.
ஜனநாயகம் தழைப்பு: எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கருணாநிதி இவ்வளவு தூரம் பேசினார் என்றால், அதை அனுமதிப்பவராக எம்ஜிஆரும் இருந்தார்.
இதே நிலை முதல்வராக கருணாநிதி இருந்தபோதும் நீடித்தது குறித்து, சுதந்திரா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவரும் கருணாநிதியுடன் கடும் விவாதங்களில் ஈடுபட்டவருமான எச்.வி.ஹண்டே கூறியது:
பேரவைத் தலைவருக்குத்தான் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு என்றாலும், முதல்வரின் கண் அசைவுக்கேற்பதான் அவை நடவடிக்கைகள் இருக்கும்.
ஆனால், குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்களை முழுமையாகப் பேசுவதற்கு கருணாநிதி அனுமதிப்பார். எனக்கும் அப்படி வாய்ப்புகள் நிரம்பக் கிடைத்துள்ளன. பேரவையில் திமுகவை எதிர்த்து சவுக்கடி கேள்விகளாக எழுப்பியதற்காக மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடத்த பொதுக்கூட்டத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அமைப்புகள் வெள்ளிச் சவுக்கை எனக்குப் பரிசாகக் கொடுத்தன.
அந்தக் கூட்டத்தில், இந்த விருதை முறைப்படி கருணாநிதிக்குத்தான் கொடுக்க வேண்டும். பேரவையில் அவர் பேச அனுமதிப்பதால்தான், என்னால் பேசவும் முடிந்தது என்றேன்.

அவைக்கு வெளியே நல்லுறவு: சட்டப்பேரவையில் கருணாநிதி இல்லாத நேரத்தில் அவர் குறித்து கடுமையாகப் பேசிவிட்டேன். முதல்வர் அறையில் அமர்ந்து கருணாநிதி என் உரையைக் கேட்டிருக்கிறார். உடனே, அவைக்கு வந்து உடல்நலம் சரியில்லாததால் எனது அறையிலேயே இருந்தேன். ஹண்டேவுக்கு பதில் அளிப்பதற்காகவே அவைக்கு வந்தேன் என்று பதில் அளித்தார்.
உடல்நலம் சரியில்லாததால் அவைக்கு அவரை வரவழைத்துவிட்ட வருத்தம் எனக்கு இருந்தது. அதனால் அவை முடிந்து அவர் சென்றதும், தொலைபேசியில் அழைத்து அவரிடம் வருத்தம் தெரிவித்தேன். என் கண்ணியத்தைப் பாராட்டுவதாகக் கூறினார். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் எப்படி இருந்தது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
கருணாநிதியின் பேச்சு சாதுர்யம்: பேரவையில் ஒருமுறை பேசும்போது திமுகவை பாசிஸ்ட் ஆட்சி என்று கூறினேன். இப்படிக் கூறியதும் கொஞ்சம் மனதுக்கு வருத்தமாகப் போய்விட்டது. முசோலினி போன்ற பாசிஸ்ட் என்று சொல்லிவிட்டோமோ என நினைத்து மூன்றாம்தரமான பாசிஸம் என ஆங்கிலத்தில் சொன்னேன். அதை அப்படியே கருணாநிதி தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டார். திமுக ஆட்சியை மூன்றாம் தரமான ஆட்சி என்கிறார். நமது நண்பர்கள் கோபித்துக் கொண்டனர். இது மூன்றாந்தரமான ஆட்சி இல்லை. நான்காம் தரமான ஆட்சி. சூத்திரர்களின் ஆட்சி என்றார்.
சட்டப்பேரவையில் வேறு உறுப்பினர் பேசும்போது, நான் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தேன். கருணாநிதி எல்லோரிடமும் நகைச்சுவையுடன் இயல்பாகப் பேசக் கூடியவர். அப்போது பேரவைத் தலைவர் என்னை பேசுவதற்கு அழைத்துவிட்டார். நான் எழுந்து திமுகவை எதிர்த்து கடுமையாகப் பேசினேன். உடனே, கருணாநிதி எழுந்து, ஹண்டே என்னோடு இப்போதுவரை சகஜமாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். இதிலிருந்து ஒன்று தெரிகிறது. அவர் உட்கார்ந்தால்தான் ஹண்டே, எழுந்தால் சண்டை என்றார்.
சட்டப்பேரவையில் ஜனநாயக மாண்பைக் காத்தவர் கருணாநிதி. அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு. எம்ஜிஆர் - கருணாநிதி காலத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றாலும் இரு கட்சியினருக்கும் இடையே கண்ணியம் தழைத்தோங்கவே செய்தது.
1991-இல் தொடங்கி அந்தக் கண்ணியம் படிப்படியாக அதிமுக - திமுக இரு தரப்பிலும் குறைய ஆரம்பித்தது. அதற்குப் பிறகு ஆளும்கட்சியாக இருந்தபோது மட்டும் அவைக்குச் செல்வபராகவும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் அவைக்குச் செல்லாதவராகவும் கருணாநிதி இருந்து வந்தார். 2011-இல் இருந்து முதல் வரிசையில் அமர இடம் கொடுத்தால், அவைக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார். முதல் வரிசையில் அவருக்கு இடம் கிடைக்கவே இல்லை.
எனினும், வெளியில் இருந்து அவர் விடுத்த அறிக்கைகளின் வாயிலாகவே அவையின் முதன்மையான பேச்சுக்குரியவராக கருணாநிதி இருந்து வந்துள்ளார்.
உழைப்பே உயர்வு: சட்டப்பேரவையில் காமராஜர் படம் வைப்பதற்கு முன், முதல்வராக இருந்த எம்ஜிஆர் தமது அறைக்கு எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதியை அழைத்து, படத்துக்குக் கீழ் வைக்கும் வகையில் ஒரு வாசகம் எழுதித் தருமாறு கூறினார்.
உழைப்பே உயர்வு தரும் என்று கருணாநிதி எழுதிக் கொடுத்த வாசகம்தான் இப்போதும் பேரவையில் காமராஜர் படத்தின் கீழ் உள்ளது. கருணாநிதியும் 14 வயதில் சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, உழைப்பால் உயர்ந்தவர்தான். ஒரு வகையில், உழைப்பே கருணாநிதியின் உண்மையான உடன்பிறப்பாக இருந்து வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...