'ஜா கட்டரை' பயன்படுத்தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின

சென்னை தியாகராய நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை 'ஜா கட்டரை' வைத்து இடிக்கும் பணிகள் இன்று காலை தொடங்கியது.
'ஜா கட்டரை' பயன்படுத்தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின


சென்னை: சென்னை தியாகராய நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை 'ஜா கட்டரை' வைத்து இடிக்கும் பணிகள் இன்று காலை தொடங்கியது.

புதன்கிழமை அதிகாலை சென்னை சில்கஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. கடந்த 2 நாள்களாக கட்டடத்தின் பெரும்பகுதியில் தீ அணைக்கப்பட்டாலும், தீப்பொறியினால் அவ்வப்போது தீப்பற்றி எரிகிறது. இதனால், கட்டடம் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும் எப்போது எந்த தளத்திலிருந்து கட்டுமானம் சரியும் எனும் சூழல் நிலவியது.

இதனால், சென்னை சில்க்ஸ் அடுக்குமாடி வணிக கட்டடத்தை இடிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, பேரிடர் மீட்புக்குழுவினர் ஆகியோர் சேர்ந்து கட்டடத்தை இடிக்கும் ஆயத்த பணிகளை நேற்று நண்பகல் 1 மணியளவில் இருந்து தொடங்கினர். அதன்படி, சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலிருந்தும் தேக்கி வைக்கப்பட்ட கட்டட கழிவுப்பொருள்களை 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

15 அடிக்கு சமநிலை மட்டம் உருவாக்க..: கட்டுமான கழிவுப்பொருள்கள் 15 அடியளவுக்கு கொட்டப்பட்டு, நிரப்பப்பட்டது. அதன்பிறகு, சமன்படுத்தி பின்னர் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கட்டடத்தை 3 ஜாகிராக் கட்டர் இயந்திரம் (காங்கிரிட் கட்டட சுவர்களை இடித்து கட்டடத்தின் உட்புறமாக கொட்டும் முறையில் செயல்படும் இயந்திரம்), துளையிடும் நவீன கருவி மூலம் நள்ளிரவுக்குப் பின்னர் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

அதிக பிரகாசமுள்ள விளக்குகள்: அதுபோல், கட்டடத்தை சுற்றியும் 200க்கும் மேற்பட்ட அதிக பிரகாசம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டடம் 3 நாள்களுக்குள் இடித்து முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாதுகாப்பான முறையில் கட்டடத்தை இடிக்க 'ஜா கட்டரை' வைத்து இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இன்னும் 3 நாட்களில் கட்டடம் முழுமையாக இடிக்கப்படும் என்றும், பொதுமக்கள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com