நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மேற்குறிப்பிட்டவாறு சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் மே 7-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) நடைபெற்றது. பல்வேறு மொழிகளில் நடந்த இந்த தேர்வின் வினாத்தாள் ஒரே மாதிரியாக வழங்கப்படாமல், சில மொழிகளில் எளிமையாகவும், சில மொழிகளில் கடினமாகவும் இடம் பெற்றிருந்தன என்ற புகார் எழுந்தது.
இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கான ஒரே அளவீடாக இந்த நீட் தேர்வு அமையாது. எனவே தேர்வை ரத்து செய்தும், தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஜொனிலா, சூர்யா, சித்தார்த், அஜய் சரண் உள்ளிட்ட 9 மாணவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், சிபிஎஸ்இ சென்னை மண்டல அதிகாரி மகேஷ் டி. தர்மாதிகாரி செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்தார்.
அதன் விவரம்: நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் மொழி வாரியாக வெவ்வேறு விதமாக இருப்பதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறு. குஜராத்தி மொழியில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையானதாக அமைந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிகள் இல்லை. மொழி வாரியாக வினாக்கள் மாறுபட்டிருக்கலாம், ஆனால், தேர்வின் கடினத் தன்மையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
நீட் தேர்வின் நோக்கமானது ஒரே விதமான நுழைவுத் தேர்வை கடைபிடிப்பதே தவிர, ஒரே மாதிரியான வினாத்தாள்களைப் பின்பற்றுவது அல்ல. குஜராத்தி, ஒரியா, பெங்காலி, மராத்தி, அசாமி, தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய 8 மொழிகளிலும் தலா 4 நிபுணர்கள் வீதம் 32 நிபுணர்களைக் கொண்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டன. எளிமை, சராசரி, கடினம் என்ற அடிப்படையில் வினாக்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் 92.75 சதவீதம் பேரும், பிற 8 மொழிகளில் 9.25 சதவீதம் பேரும் தேர்வு எழுதியுள்ளனர். தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்துள்ள இடைக்கால தடையால் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை தாமதமாகிறது. எனவே, தேர்வு எழுதிய மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தடையை நீக்கி, தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.