

கடந்தாண்டு (2016) அக்டோபர் 21-ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு பத்திரப்பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
விளை நிலங்களை வீட்டு மனைகளாக 'லே-அவுட்' போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப் பதிவுத்துறையினர் எந்தவித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என கடந்தாண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அங்கீகாரமில்லா வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்கி, தமிழக அரசு இரண்டு அரசாணைகளைப் பிறப்பித்தது. இந்த இரண்டு அரசாணைகளும் அரசிதழிலில் (மே 4) வெளியிட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அங்கீகாரமில்லா வீட்டு மனைகளை வரன்முறைபடுத்துவது தொடர்பாகப் பிறப்பித்த இடைக்கால உத்தரவை தெளிவுபடுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, கடந்தாண்டு (2016) அக்டோபர் 21-ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு பத்திரப்பதிவு செய்யலாம் என்று தெளிவுபடுத்தினர். தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு கடந்தாண்டு அக்டோபர் 21-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் பிரிவு 22(ஏ)-இன்படி, அக்டோபர் 21-ஆம் தேதிக்கு முன்னர் பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் மற்றும் அங்கீகாரமில்லா வீட்டு மனைகளை மறு பதிவு செய்யலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு பத்திரப்பதிவு செய்யலாம். அவற்றை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கத் தேவையில்லை.
ஆனால், அந்த மனைகளில் கட்டுமானம் மேற்கொள்ள வேண்டுமென்றால், அண்மையில் தமிழக அரசு கொண்டு வந்த புதிய விதிகளுக்கு உட்பட்டே கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.