ஸ்டாலின் கோரிக்கை பேரவை மரபுக்கு எதிரானது: பழ. நெடுமாறன்

அதிமுக அரசைக் கலைக்க ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருப்பது மாநில சுயாட்சி கோரிக்கை மற்றும் சட்டப் பேரவை மரபுக்கு எதிரானது என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர்

அதிமுக அரசைக் கலைக்க ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருப்பது மாநில சுயாட்சி கோரிக்கை மற்றும் சட்டப் பேரவை மரபுக்கு எதிரானது என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் செய்தியாளர்களுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து அதிமுக அமைச்சரவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டிருப்பது பேரவை மரபுகளுக்கு எதிரானது.
தற்போது பேரவையில் வரவு, செலவு கணக்கு விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்துத் துறைகளிலும் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இதில் ஏதாவது ஒரு மானியக் கோரிக்கையில் ஒரு திருத்தத் தீர்மானம் கொண்டு வரலாம். அதில் அரசு தோற்றுவிட்டால் அரசு கவிழ்ந்துவிடும். இதுபோல் திருத்தத் தீர்மானம் கொண்டுவராமல் ஆளுநர் மூலம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயல்வது, திமுக இதுவரை பேசிவந்த சுயாட்சிக் கோரிக்கைக்கு எதிரானது.
பேரவை உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அதுகுறித்து உரிய ஆதாரங்களைக் காட்டி வழக்கு மன்றத்தில் சட்டரீதியாக வழக்குத் தொடுப்பதுதான் சரியான நடவடிக்கை.
தமிழ்நாட்டில் தற்போதுள்ள காவிரி, பெரியாறு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் திராவிடக் கட்சிகள்தான் காரணம்.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி சிங்களக் கடற்படையினர் தமிழக எல்லைக்குள் வந்து தமிழக மீனவர்களைக் கைது செய்கின்றனர். ஆனால், இந்தியக் கடற்படை அதற்கு சிறு எதிர்ப்புகூடத் தெரிவிக்கவில்லை. இதனால் தமிழக மக்களை இந்திய அரசு தனது மக்களாக கருதவில்லை என்று தெரிகிறது.
மதவாத எதிர்ப்பு சக்திகளும், ஜனநாயக சக்திகளும் ஓரணியில் ஒன்று திரண்டு பாஜகவை எதிர்க்க முற்பட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com