மாட்டிறைச்சி விவகாரம்: திமுக - காங்கிரஸ் வெளிநடப்பு
மாட்டிறைச்சி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் திருப்தியாக இல்லை என திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் இருந்து


மாட்டிறைச்சி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் திருப்தியாக இல்லை என திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்புச் செய்தனர்
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் தனி மனித உரிமை, விவசாயிகளுக்கு இருக்கக்கூடிய வாழ்வுரிமை, சிறுபான்மைச் சமுதாயத்துக்கு அளிக்கப்பட்டிருக்கக் கூடிய மதச்சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கக்கூடிய வகையில், ஒரு கொடுமையான சட்டத்தை, மாட்டிறைச்சி தடை சட்ட விதிகளை மத்திய அரசு மே 23-இல் பிறப்பித்துள்ளது.
இந்த விதிகளால் நாட்டின் பொருளாதாரம், குறிப்பாக வேளாண் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.
மாநில உரிமைகளைப் பாதிக்கக்கூடிய இந்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
கேரளம் மற்றும் மேகாலயா சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் கூட்டி இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவா மாநிலத்தின் பாஜக முதல்வர் மாட்டிறைச்சி தடைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதிமுக ஆட்சி மட்டும் ஏன் மெளனம் காக்கிறது எனத் தெரியவில்லை.
எனவே, இந்தக் சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே இதற்கென ஒரு தனி சிறப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து அந்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.
காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறியது: மாட்டிறைச்சி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும். அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு உள்நோக்கத்துடன் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதற்குத் தமிழக அரசு உடந்தையாக இருந்துவிடக் கூடாது என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோரும் மாட்டிறைச்சித் தடைக்கு எதிராகத் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்கு அனுமதி கேட்டார். முன்பே அனுமதி பெறாததால் பேரவைத் தலைவர் தனபால் அனுமதி தர மறுத்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறுகிறதோ, அதை அரசு செயல்படுத்தும் எனக் கூறினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பேரவை உறுப்பினர்கள்.
பேரவைத் தலைவர்: இந்த விவகாரம் குறித்து தகவல் கோரல் என்ற அடிப்படையில்தான் உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர். நானும் சம்மதித்தேன். இதற்கு மேல் இந்த விவகாரம் குறித்துப் பேச முடியாது.
மு.க.ஸ்டாலின்: மாட்டிறைச்சி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினோம். அது குறித்து முதல்வர் எதுவும் கூறவில்லை. குறைந்தபட்சம் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலாவது முதல்வர் பதில் அளிப்பார் என எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. அதனால் முதல்வர் பதிலில் எங்களுக்குத் திருப்தி இல்லை. வெளிநடப்பு செய்கிறோம் என்றார். அதைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசுக்கு தமிழக அரசு பயப்படுவதாக முழக்கங்கள் எழுப்பியவாறு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் வெளிநடப்பு: சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி எழுந்து, இந்த விவகாரத்தின் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும் எனக் கோரினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர் இதே கருத்தை எழுப்ப முயற்சித்தார். அதற்குப் பேரவைத் தலைவர் அனுமதி தரவில்லை.
அதைத் தொடர்ந்து கே.ஆர்.ராமசாமி தலைவர் காங்கிரஸ் உறுப்பினர்களும், அபுபக்கரும் வெளிநடப்புச் செய்தனர்.
அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்புச் செய்தனர்.
மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடை ரத்து செய்யும் வகையில் தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு ஆகியோர் வலியுறுத்தினர்.
இந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் இந்த விவகாரத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை, பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை எனவும் வெளிநடப்புச் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...