போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஜெயலலிதா மகன் என்று உரிமை கோரிய நபரை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மகன் என்று உரிமை கோரிய நபரைக் கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2017, 6:17 am

தினமணி

ஜெயலலிதா மகன் என்று உரிமை கோரிய நபரைக் கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மற்றும் தெலுங்கு நடிகர் சோபன் பாபு ஆகியோருக்கு பிறந்ததாகக் கூறி, மனுதாரர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என தெரிந்ததையடுத்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை குற்றப்பிரிவு காவல் துறைக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டார்.

வழக்கு விவரம்: ஜெயலலிதா, சோபன் பாபு ஆகியோருக்கு, கடந்த 1985 -ஆம் ஆண்டு பிப்ரவரி 15 -ம் தேதி பெங்களூருவில் பிறந்ததாக ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் உரிமை கோரினார். பெற்றோரிடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, தன்னை அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தம்பதிக்கு தத்து கொடுத்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு ஆதரவாக, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சாட்சி கையெழுத்து இடம்பெற்ற ஆவணம் (பத்திரம்) ஒன்றையும் கிருஷ்ணமூர்த்தி சமர்ப்பித்தார். இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'ஜெ.கிருஷ்ணமூர்த்தி (மனுதாரர்) என்பவர், ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - வசந்தாமணி தம்பதியரின் சொந்த மகன் என்றும், சுப்பிரமணி என்ற பத்திரம் விற்பவரிடமிருந்து முன் தேதியிட்டு பத்திரம் வாங்கி, தான் தத்து கொடுக்கப்பட்டதாகப் போலியாக ஆவணங்களை மனுதாரர் தயாரித்துள்ளார். ஆகையால், அவரது ஆவணங்கள் போலியானது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தீர்ப்பில் பதிவு செய்த நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிமன்றத்துடன் மனுதாரர் விளையாட அனுமதிக்க முடியாது. அவரைக் கைது செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, விசாரணையை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் மனுதாரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் சென்னை குற்றப்பிரிவு காவல் துறைக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.