அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் நண்பர் மர்மச் சாவு: போலீஸார் தீவிர விசாரணை
சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் நண்பரும், நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல அரசுக் கட்டட ஒப்பந்ததாரருமான சுப்ரமணியம், தனது தோட்டத்தில் திங்கள்கிழமை மர்மமான முறையில்


சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் நண்பரும், நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல அரசுக் கட்டட ஒப்பந்ததாரருமான சுப்ரமணியம், தனது தோட்டத்தில் திங்கள்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
நாமக்கல் மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கே.ஆர். சுப்ரமணியம் (58). இவர், அரசுக் கட்டட ஒப்பந்தப் பணிகளைச் செய்து வந்தார். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டட கட்டுமானப் பணியை மேற்கொண்டு வந்தார்.
சோதனையில் சிக்கியவர்: கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீடு, அவரது உறவினர் உள்ளிட்டோருக்குச் சொந்தமான குவாரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, சுப்ரமணியம் வீட்டிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து, சில ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.
சோதனை நடைபெற்ற சமயத்தில் சுப்ரமணியம், சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருந்தார். இதனால், சென்னை வருமான வரித் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருவதற்கான உத்தரவை, அவரது மகன் சபரியிடம் அதிகாரிகள் வழங்கியிருந்தனர்.
வெளிநாட்டிலிருந்து சுப்ரமணியம் திரும்பியதைத் தொடர்ந்து, கடந்த 4-ஆம் தேதி சென்னை வருமான வரித் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காகச் சென்று வந்தார். இந்த நிலையில் அவர், நாமக்கல் அருகே மோகனூர் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள விவசாயத் தோட்டத்துக்கு திங்கள்கிழமை காலை சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் திடீரென்று மயக்கமடைந்து விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து அவரது மூத்த சகோதரர் காளியண்ணன் கூறியது:
சுப்ரமணியத்துக்கு, மனைவி சாந்தி (52), மகள் அபிநயா (30), மகன் சபரி (24) ஆகியோர் உள்ளனர். மகள் அபிநயாவுக்கு திருமணமாகி சேலம் வலசையூரில் வசித்து வருகிறார். மகன் சபரி, மருமகன் அரவிந்த் இருவரும் சுப்ரமணியத்தின் ஒப்பந்தப் பணிகளைக் கவனித்து வருகின்றனர். அவர், தோட்டத்தில் மயக்கமடைந்து இறந்ததாகக் கூறுகின்றனர். தோட்டத்தில் சிறிய ஆஸ்பெட்டாஸ் கூரை வீடு மட்டுமே உள்ளது என்றார்.
இதனிடையே, சுப்ரமணியம் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக மோகனூர் போலீஸார் வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே இறப்புக்கான முழு காரணமும் தெரியும் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
தொடரும் மர்ம மரணம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரான சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ், ஆத்துôர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அதே நாளில் கேரள மாநிலத்தில் கனகராஜின் நண்பர் குடும்பத்தினருடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் கனகராஜின் நண்பர் மட்டும் உயிர் தப்பினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்த நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் மர்மான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரித் துறை சோதனையால் மன வேதனை: கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் பொறுமையானவர். அவரது வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருங்கிய நண்பர் என்பதால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி கட்டட ஒப்பந்தப் பணியை எடுத்து செய்து வந்தார்.
வருமான வரித் துறை சோதனையைத் தொடர்ந்து அவரது அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு 'சீல்' வைக்கப்பட்டன. வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. இதில் அவருக்கு மன உளைச்சல் இருந்தது. அவர், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை கிடையாது என அவரது நண்பர்கள் சிலர் தெரிவித்தனர்.
வயிற்றில் விஷம் இருப்பதால் தற்கொலையாக இருக்கலாம்: போலீஸார் சந்தேகம்
விவசாய தோட்ட வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்த அரசு ஒப்பந்ததாரர் கே.ஆர்.சுப்ரமணியத்தின் உடல், நாமக்கல் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது வயிற்றில் விஷம் இருந்ததால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
நாமக்கல் மோகனுôர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் (58). தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நண்பரான சுப்ரமணியம், மோகனுôர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள விவசாய தோட்ட வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
தொடர்ந்து திங்கள்கிழமை மாலை அவரது உடல், உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் விஷம் இருந்துள்ளது. இதனால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர். இதனிடையே, அவர் இறந்து கிடந்த இடத்தில் குளிர்பான புட்டி கிடந்தது. இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மோகனுôர் போலீஸார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, சுப்ரமணியத்தின் உடல், அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் நாமக்கல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...