சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் அபார சாதனை

பழச்சாறு கடையிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பி.மோகன்ராஜ், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,200-க்கு 1157 மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :12 மே 2017, 10:01 pm

பழச்சாறு கடையிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பி.மோகன்ராஜ், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,200-க்கு 1157 மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். மீட்கப்பட்ட 76 குழந்தைத் தொழிலாளர்கள் 1000-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறு வயதில் ஓடி விளையாடுவதையும் பள்ளிக்குச் செல்வதையும் இழந்த இவர்கள், இன்று அதே குடும்பச் சூழல் காரணமாக தங்களின் உயர் கல்விக் கனவு தகர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
சட்டப்படி 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும் 18 வயதுக்கு உட்பட்டவர்களை எந்தவிதமா அபாயகரமான தொழிலிலும் பணியமர்த்தக்கூடாது. குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பணிக்குச் சென்று விடுகின்றனர். இவர்களை மீட்டு மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் சிறந்த பணியை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
1000-க்கு மேல் 76 பேர்: இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 8,156 பேர் தமிழகத்தில் உள்ள 324 தேசிய குழந்தைத் தொழிலாளர் நலப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களில் 277 பேர் அண்மையில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வை எழுதி, அதில் 245 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் 4 பேர் 1200-க்கு 1,100-க்கு மேல் மதிப்பெண் பெற்றும் 76 பேர் 1000-க்கு மேல் மதிப்பெண் பெற்றும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த...தருமபுரி மாவட்டத்தில் பழக் கடையிலிருந்து 2010-ஆம் ஆண்டில் மீட்கப்பட்ட பி.மோகன்ராஜ் என்ற மாணவர், மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களிலேயே அதிகபட்சமாக பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1157 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பிளஸ்-2 வகுப்பில் வேளாண் பிரிவை எடுத்துப் படித்த இவர் கால்நடை மருத்துவம் அல்லது வேளாண்துறை சார்ந்த பட்டப் படிப்பை மேற்கொள்ள விருப்பமாக உள்ளார். பெற்றோர் கூலி வேலை செய்து வருவதால், உயர் கல்வி மேற்கொள்ள உதவியை எதிர்நோக்கியுள்ளார்.
வீட்டு வேலையிலிருந்து மீட்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வம்ஷி கிருஷ்ணா என்ற மாணவர் 1,127 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பிளஸ்-2 வகுப்பில் கணக்குப் பதிவியல் பிரிவில் படித்த இவர், சி.ஏ. முடித்து கணக்குத் தணிக்கையாளர் ஆக வேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்டுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த கோகுல் 1,122 பெற்றுள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலிலிருந்து மீட்கப்பட்டவர்.
உதவி தேவை: அதிக மதிப்பெண் பெற்ற மோகன்ராஜ் கூறுகையில், குடும்பச் சூழல் காரணமாக குழந்தைப் பருவத்தில் பணிக்குச் சென்ற எங்களுக்கு இப்போது அதே குடும்பச் சூழலால் உயர்கல்விக் கனவு தகர்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பரந்த மனம் கொண்டவர்கள் எங்களுக்கு உதவினால் எங்களால் சாதிக்க முடியும் என்றார்.
பல்வேறு தொழில்களிலிருந்து மீட்டு மீண்டும் படிக்க வைத்ததில் முக்கியப் பங்கு வகித்த தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் மீட்பு அமைப்பின் பொறுப்பாளர்கள் கூறியதாவது: பொதுத் தேர்வில் இந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளபோதும், குடும்பச் சூழல் காரணமாக, கல்விக் கட்டணங்களையும், பிற கட்டணங்களையும் செலுத்த முடியுமா என்ற அச்சம் இவர்களிடையே எழுந்துள்ளது.
இவர்களுக்கு உதவ விரும்புவோர், தமிழக அரசு குழந்தைத் தொழிலாளர் மீட்பு அலுவலகத்தை 044 - 24321407, 24321438 என்ற தொலைபேசி எண்ணையும், www.tnchildlabour@yahoo.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.