ரேங்க் முறை ரத்து: வெறிச்சோடிய பள்ளிகள்!

பிளஸ் 2 தேர்வில் ரேங்க் முறை ரத்தானதால், தேர்வு முடிவுகள் வெளியான நாளில் (வெள்ளிக்கிழமை) மாணவர்களின் கூட்டமின்றி பள்ளிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ரேங்க் முறை ரத்து: வெறிச்சோடிய பள்ளிகள்!

பிளஸ் 2 தேர்வில் ரேங்க் முறை ரத்தானதால், தேர்வு முடிவுகள் வெளியான நாளில் (வெள்ளிக்கிழமை) மாணவர்களின் கூட்டமின்றி பள்ளிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆண்டுதோறும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் அனைத்து பள்ளிகளிலும் கூட்டம் அலைமோதும். நாளிதழ்களில் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியான காலத்தில், தங்களின் மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்ள அனைத்து மாணவர்களுமே பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
இணையதள காலம்: அதன் பிறகு, இணையதளத்தில் மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்ளும் முறை நடைமுறைக்கு வந்தது. இதனால் அதிக மதிப்பெண்ணைப் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பள்ளிக்கு வந்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி, வாழ்த்து பெற்றுச் செல்வர்.
இதன் காரணமாக, பிரபல பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும், அவர்களைப் பேட்டியெடுக்கும் செய்தியாளர்களின் கூட்டமும் அலைமோதும்.
தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி முதல்வர் மாநில அளவில், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு இனிப்பு ஊட்டுவது, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவரது பெற்றோர் இனிப்பு பரிமாறுவது, வாழ்த்து தெரிவிப்பது என கொண்டாட்டங்கள் களைகட்டும். அதேசமயம், மதிப்பெண் குறைந்த மாணவர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறைந்தது.
ரேங்க் முறை ரத்து: இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், முதலிடத்தைப் பெற்ற மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. ஒருசில மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வந்து சென்றனர்.
சில பள்ளிகளில் ஆசிரியர்களைத் தவிர மாணவர்களே இல்லை. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆசிரியர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டதால், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நாளில், வழக்கமாகக் காணப்படும் உற்சாகம், கொண்டாட்டம் எதுவும் இல்லாமல், பள்ளிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com