போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும் என்று திமுக செயல்தலைவர்

பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களின் அறிக்கை:
மு.க.ஸ்டாலின்: போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தால் மக்கள் படும் அவதிகளை நீக்க முதல்வர் இனியும் கெளரவம் பார்க்காமல் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.43 லட்சம் ஊழியர்கள் வைத்த 7 முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக அரசோடு 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்து, பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்குப் போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அரசின் மெத்தனப்போக்கே காரணம். நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ஏழை, எளிய மக்கள் அரசுப் பேருந்துகளில்தான் பயணம் செய்கிறார்கள். இவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. போக்குவரத்துத் துறையின் இன்றைய நிலைக்கு முக்கியக் காரணம் நிர்வாகச் சீர்கேடும், ஊழலும்தான். எனவே, தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கி, வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தற்போது நடைபெறும் போராட்டத்துக்கு மாநில அரசுதான் பொறுப்பு.
இப்போராட்டம் அரசியல் ஆதாயத்துக்காக தொடங்கப்பட்டது என போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னையை சுமூகமாகப் பேசி தீர்வு காண வேண்டும்.
தாற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்குவது விபத்து உள்ளிட்ட விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.
ராமதாஸ் (பாமக): போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் ஆளுங்கட்சி தொழிற்சங்கப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் பெரும்பான்மையான பேருந்துகள் ஓடவில்லை. இதனால் அரசு மீது மக்கள் கோபம் அடைந்துள்ளனர். இதே
நிலை நீடித்தால் அரசுக்கு எதிரான தங்களின் கொந்தளிப்பை மக்கள் வெளிப்படுத்தக் கூடும். தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும்.
மதிமுக அவைத் தலைவர் சு.துரைசாமி: நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம், ஓய்வூதியப் பணத்தை வழங்குவது ஆகிய கோரிக்கைகள் குறித்துத் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்படாததால், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள், நோயாளிகள், மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி, விரைவில் சுமுகத் தீர்வு காண வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்வரே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளான ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, புதியஊதிய ஒப்பந்தம் உட்பட அனைத்துக் கோரிக்கைகளுக்கும் சுமுகத் தீர்வு காண வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: போக்குவரத்துக்கழகங்களில் ஓய்வுபெற்றோருக்கு வழங்கவேண்டிய பணப்பயன்கள் ஏறத்தாழ ரூ.1652.83 கோடி நிலுவை உள்ளது. அடுத்து, பல்வேறு வகைகளில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.4,800 கோடி இன்னும் உரிய நிறுவனங்களில் செலுத்தப்படாமல் உள்ளது.
ஒட்டுமொத்தத்தில் போக்குவரத்துக் கழகம், கடந்த 13.03.2017 வரையில் ரூ. 18,300 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு தொழிலாளர்களைப் பலியாக்குவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. எனவே, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினரோடு தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.
போராட்டம் நாள்கணக்கில் நீடித்தால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com