அதிமுகவின் 3 வங்கி கணக்குகள் குறித்த விவரங்கள் மற்றும் கட்சியின் வரவு - செலவு தொடர்பான ஆவணங்களை நவம்பர் 10 -ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பாக, அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த செப்டம்பர் 12- ஆம் தேதி, "அதிமுக அம்மா", "அதிமுக புரட்சித் தலைவி அம்மா" என்ற பெயரில் சென்னையில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து எங்களை நீக்கியது உள்ளிட்ட 12 தீர்மானங்களும் செல்லாது என அறிவிக்க வேண்டும்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் பொருளாளர் சீனிவாசன் மயிலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கி, அபிராமபுரம் இந்தியன் வங்கி, கதீட்ரல் சாலை பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஆகிய 3 வங்கிகளில் உள்ள கட்சியின் கணக்குகளைக் கையாள தடை விதிக்க வேண்டும். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குத் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கட்சியின் வங்கி கணக்குகள், இதர வரவு -செலவு தொடர்பான ஆவணங்களை அவர்களுக்கு சாதகமாக திருத்த வாய்ப்புள்ளது. எனவே, கட்சியின் 3 வங்கி கணக்குகள், வரவு செலவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தனர்.
இவ்வழக்கில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் அவைத் தலைவர் மதுசூதனன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர் செம்மலை, அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் 3 வங்கிகளின் மேலாளர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியின் 3 வங்கி கணக்குகள் குறித்த விவரங்கள், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் 10 -ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அதிமுக தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இதுதொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 29 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.