கொடுங்கையூரில் சிறுமிகள் மரணத்துக்கு மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அக் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
2015-ஆம் ஆண்டு பெரு வெள்ளப் பாதிப்புக்குப் பிறகு சென்னை நகரில் உள்ள மின் விநியோக பில்லர் பெட்டிகளை தரைமட்டத்திலிருந்து உயர்த்தி வைக்க முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான பில்லர் பெட்டிகள் பழைய நிலையிலேயே உள்ளன. எனவே, அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
மின் கசிவு ஏற்பட்டால் மின் விநியோகம் உடனே துண்டிக்கப்படும் வகையில் "சர்க்யூட் பிரேக்கர்களை", பூமிக்கு அடியில் உள்ள புதைவட கம்பிகள் இருக்கும் இடங்களில் அமைக்காதது ஏன்? பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது ஏன்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கு மின்வாரியத்தின் அலட்சியமே காரணம்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் இருக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.