விழுப்புரம் தீயணைப்பு நிலையம் சீரமைக்கப்படுமா? சுதந்திரத்துக்கு முன்பு கட்டப்பட்டது

சுதந்திரத்துக்கு முன்பு கட்டப்பட்ட விழுப்புரம் தீயணைப்பு நிலையம் தற்போது சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதால், தீயணைப்பு வீரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் தீயணைப்பு நிலையம் சீரமைக்கப்படுமா? சுதந்திரத்துக்கு முன்பு கட்டப்பட்டது
Updated on
2 min read

சுதந்திரத்துக்கு முன்பு கட்டப்பட்ட விழுப்புரம் தீயணைப்பு நிலையம் தற்போது சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதால், தீயணைப்பு வீரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் தீயணைப்பு நிலையம் கடந்த 1946}இல் தொடங்கப்பட்டது. இந்த நிலையத்தில் ஒரு நிலைய அலுவலர், 9 ஓட்டுநர்கள், 4 முன்னணி தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 40 வீரர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். 5 தீயணைப்பு வாகனங்களும், அவசர கால மீட்புப் படகு மற்றும் மீட்பு சாதனங்களும் உள்ளன. இந்த தீயணைப்பு நிலையம் பழங்கால சிதைந்த கட்டடத்தில் பேராபத்துடன் இயங்கி வருகிறது. விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கு மிகச்சிறிய அளவில் தீயணைப்பு அலுவலகமும், அதில் பாதியளவு தீயணைப்பு உபகரணங்கள், ஆவணங்கள் வைக்கும் பொருள் வைப்பறையும் உள்ளன. இவற்றுக்கு தடுப்புக் கதவு, தடுப்புச் சுவர்கள் ஏதுமில்லை.

குறுகிய அளவில் உள்ள இந்த அலுவலகத்தில்தான் ஊழியர்கள் காத்திருப்பதுடன், அலுவல் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். முன் பகுதியில் தொலைபேசி அழைப்புப் பிரிவு இயங்குகிறது. அதன் மேல் சுவற்றின் காரைகள் பெயர்ந்து விழுந்து கொண்டு வருகிறது. மழை நீர் ஊறிய நிலையில், சுவர்களில் ஈரம் பதிந்து, தண்ணீர் சொட்டுகிறது. உள்ளே அலுவலகப் பகுதியிலும், மேல் காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது.

அதற்கு அடுத்தபடியாக உள்ள உபகரணங்கள் வைப்பறையும், தினசரி பயன்படுத்தும் உபகரணங்கள், ஆவணங்கள் இருந்தும் பாழடைந்த கிடங்கு போல் காட்சியளிக்கிறது. அங்கேயும் மேல் சுவற்றின் காரைகள் பெயர்ந்துள்ளன.
 அலுவலக கட்டடத்துக்கு அருகில் சிமென்ட் மேற்கூரைகளாலான பழங்கால கொட்டகை உள்ளது. இதில், 2 தீயணைப்பு வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். மீதமுள்ள வாகனங்கள் திறந்த வெளியில் தான் நிறுத்தப்படுகிறது.

தீயணைப்பு வாகனம் நிறுத்தும் கொட்டகையும், சிமென்ட் ஓடுகள் உடைந்து தண்ணீர் ஒழுகுகிறது. அடுத்ததாக, இதனருகே பழங்கால சிமென்ட் ஓட்டினாலான கொட்டகை உள்ளது. அதுவே வீரர்கள் ஓய்வறையாகும். இதன் மேலிருந்த சிமென்ட் ஓடுகள் உடைந்து, மழை நீர் முழுவதும் உள்ளே ஒழுகும் நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் படுத்து ஓய்வெடுக்க முடியாத மோசமான நிலை உள்ளதாக தீயணைப்பு வீரர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

தீயணைப்பு நிலையத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் பல இடங்களில் விழுந்துள்ளன. நிலையத்தின் பக்கவாட்டிலும், பயன்படுத்தப்படாத நுகர்பொருள் வாணிபக் கழக காலியிடத்திலும் கழிவு நீர் குளம்போல் தேங்கி மோசமான நிலையில் உள்ளது. இதனால் வெயில் காலத்திலும் கொசுத்தொல்லையால், தீயணைப்பு வீரர்கள் நோய் பாதிப்பில் சிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் 12 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.

இதில், விழுப்புரம் நிலையம் மட்டுமே புதுப்பிக்கப்படாமல், இயங்கி வருகிறது. இடிந்து விபத்து ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள தீயணைப்பு கட்டடத்தை இடித்தகற்றிவிட்டு, புதிய தீயணைப்பு நிலையக் கட்டடம், வாகன நிறுத்துமிடங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வருகிறது.

ரூ.1.10 கோடியில் கட்டடம் கட்ட பரிந்துரை
 இதுகுறித்து, மாவட்ட தீயணைப்பு அதிகாரி கணேசன் கூறியதாவது: விழுப்புரம் தீயணைப்பு நிலையக் கட்டடம் சேதமடைந்துள்ளது குறித்து பொதுப்பணித் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அவர்கள் ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளோம். ரூ.1.10 கோடி மதிப்பில் புதிய நிலையம் கட்டமைக்க பரிந்துரைத்து, அரசின் நிதி மற்றும் ஒப்புதலுக்காக நீண்ட காலம் காத்துள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com