சசிகலா உறவினர் வீடுகளில் அதிரடி சோதனை

அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
மன்னார்குடியில் உள்ள அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் வீடு.
மன்னார்குடியில் உள்ள அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் வீடு.
Updated on
2 min read

200 இடங்கள் ,1800 அதிகாரிகள், 200 வாகனங்கள்
அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 200 இடங்களில் அதிரடியாக நடைபெற்ற இந்தச் சோதனைகளில் வருமான வரித் துறையைச் சேர்ந்த 1800 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தச் சோதனைகள் பற்றிய தகவல்கள் கசியாமல் இருக்க 200க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்களை அதிகாரிகள் பயன்படுத்தினர். சோதனை ஓரிரு இடங்களில் நிறைவு பெற்றாலும், பெரும்பாலான இடங்களில் இரவு வரை சோதனை நீடித்தது. 
சென்னையில் ஜெயா தொலைக்காட்சி, 'நமது எம்ஜிஆர்' பத்திரிகை அலுவலகங்கள், தினகரன், இளவரசியின் மகன் விவேக் வீடு, சசிகலா ஆதரவு வழக்குரைஞர் செந்தில் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்கள் என 12 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
போலி நிறுவனங்களை நடத்தியது, அதில் கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை முதலீடு செய்தது, வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களால் இந்த அதிரடி சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித் துறை அதிகாரிகள் வட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா தொலைக்காட்சி அலுவலகமும் நமது எம்ஜிஆர் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் சோதனை மேற்கொண்டனர். அதே நேரத்தில், போயஸ்கார்டனில் உள்ள ஜெயா தொலைக்காட்சியின் பழைய அலுவலகம், சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள இளவரசியின் மகனும் ஜெயா தொலைக்காட்சியை நிர்வாகியுமான விவேக் வீடு, வேளச்சேரியிலுள்ளஅவரது 'ஜாஸ் சினிமாஸ்' நிறுவன அலுவலகம், கிண்டியிலுள்ள அதன் அலுவலகம், தியாகராய நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீடு, கே.கே. நகரிலுள்ள டிடிவி தினகரனின் உதவியாளர் ஜனா (எ) ஜனார்த்தனன் வீடு, சென்னை திருவான்மியூரில் உள்ள திவாகரன் வீடு, சௌகார்பேட்டையிலுள்ள சுரானா கார்ப்பரேஷன் நிறுவனம், ஜெயா தொலைக்காட்சியின் பொது மேலாளர் வீடு உள்ளிட்டவற்றில் சோதனை நடைபெற்றது.
பிற இடங்களில்...:

சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் சகோதரர் வி. திவாகரன் வீடு.
சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் சகோதரர் வி. திவாகரன் வீடு.

இதுதவிர, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும் தஞ்சாவூரில் அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீடு, மன்னார்குடி மன்னை நகரில் உள்ள திவாகரன் வீடு, தினகரன் வீடு, நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட், தஞ்சாவூரில் சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீடு உள்ளிட்ட இடங்களிலும் பெங்களூரிலுள்ள கர்நாடக மாநில அதிமுக தலைமை அலுவலகம், அம்மாநில அதிமுக செயலர் புகழேந்தி வீடு, அலுவலகம், சென்னையை அடுத்த படப்பையை சிறுமாத்தூர் பகுதியில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, புதுச்சேரி அருகே ஆரோவில்லில் உள்ள தினகரன் பண்ணை வீடு உள்ளிட்டவற்றிலும் இச்சோதனை நடைபெற்றது.
1,800 அலுவலர்கள்...இச்சோதனையில் வருமான வரித் துறையில் ஆணையர் தகுதியில் 6 அலுவலர்கள் உள்பட சுமார் 1,800 அலுவலர்கள் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
எதற்காக சோதனை?
சசிகலா பெயரில் செயல்பட்ட, போலி நிறுவனங்கள் எனக் கண்டறியப்பட்ட, பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதில் ஜெயா தொலைக்காட்சிக்குத் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த மோசடி தொடர்பாக கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையிலும் வரி ஏய்ப்புத் தொடர்பாகவும் சோதனைகள் நடத்தப்படுவதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், எதன் அடிப்படையில் சோதனை என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.
ஒளிபரப்புக்குத் தடை: ஊழியர்கள் வாக்குவாதம்


சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது, அதை நேரடி ஒளிபரப்பாக வெளியிட அதன் செய்தியாளர்கள், கேமராமேன்கள் முயற்சித்தனர். அதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் ஜெயா தொலைக்காட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சோதனை தொடர்பான நேரலை நிகழ்ச்சிகள், பேட்டி, விவாதம் உள்ளிட்டவற்றை ஒளிபரப்ப வருமானவரித் துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.

காட்சிகள் ரத்து
வருமானவரித் துறை அதிகாரிகளின் சோதனையின்போது, 'ஜாஸ் சினிமாஸ்' நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திரையரங்குகளில் சினிமா காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் எப்போது காட்சிகள் திரையிடப்படும் என்ற அறிவிப்பு இல்லாததால் ஏற்கெனவே டிக்கெட் வாங்கியவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். காலை, மதியம், பிற்பகல் வரை காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஜாஸ் சினிமாஸ் ஆன்லைன் தளமும் முடங்கியது. இந்த சோதனைகள் நள்ளிரவு வரை நீடித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com