இளவரசி மகன் விவேக் வீட்டில் நாளை வரை சோதனை!

இளவரசி மகன் விவேக் வீட்டில் நாளை வரை சோதனைத் தொடர்ந்து நடைபெறும் என்று வருமானவரித் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
இளவரசி மகன் விவேக் வீட்டில் நாளை வரை சோதனை!
Updated on
1 min read

சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் இன்று அதிகாலை தொடங்கி சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, சசிகலா சகோதரர் திவாகரன் வீடு, இளவரசியின் மகன் விவேக் வீடு, சசிகலா பரோலில் வரும் போது தங்கியிருந்த தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீடு, தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடு மற்றும் சசிகலாவின் உறவினர்கள் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ், பெங்களூருவில் அம்மா அணி அதிமுக செயலாளர் புகழேந்தி வீடு, திருவாரூர் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர் காமராஜ், திருவாரூர் கீழதிருப்பாலங்குடியில் உள்ள திவாகரன் உதவியாளர் விநாயகம் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், கோடநாடு எஸ்டேட், அவரின் உதவியாளராக இருந்தவர், மருத்துவர் உள்ளிட்டோர் வீடுகள் உட்பட  சுமார் 190 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனையில் சுமார் 1,800 அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 'ஸ்ரீநி வெட்ஸ் மஹி' என்ற திருணத்துக்கு செல்வதுபோன்ற வாகனங்களில் சோதனை நடத்தும் அதிகாரிகள் வந்தனர்.

இந்நிலையில், அதிகாலை முதலே தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றின் முதன்மை அதிகாரியும், மகாலிங்கபுரத்தில் உள்ள இளவரசியின் மகனுமான விவேக் வீட்டில் நாளை வரை சோதனை தொடர்ந்து நடைபெறும் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com