ஆளுநர் பன்வாரிலால் மற்ற மாவட்டங்களிலும் ஆய்வுப் பணி தொடரும் என அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அதிகார வரம்புகளை மீறி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் செயல்பட்டிருப்பதை அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ள நிலையில் அதை சற்றும் பொருட்படுத்தாமல் மற்ற மாவட்டங்களிலும் தனது ஆய்வுப் பணி தொடரும் என அவர் அறிவித்திருப்பது ஆணவப் போக்காகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஏற்கெனவே புதுதில்லி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் துணை ஆளுநர்கள் அத்துமீறி நிருவாகத்தில் தலையிட்டு வருகிறார்கள். இப்போது தமிழக ஆளுநரும் அதே வழிமுறையை பின்பற்றுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முக்கிய அங்கம் வகித்தவர்கள் ஆளுநர்களாக பல மாநிலங்களில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவருமே அரசியல் சட்டத்தையோ, சனநாயக மரபுகளையோ மதித்துச் செயல்படவில்லை.
மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த, அகில இந்தியக் கட்சிகள் எதுவாக இருந்தாலும் மாற்றுக் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பதவி நீக்கம் செய்து, ஆளுநர்கள் மூலம் தங்கள் கட்சியின் ஆட்சியை நடத்தியது கடந்த கால வரலாறு ஆகும். இப்போது மாநிலங்களில் பிற கட்சி அரசுகளை சிறிதளவும் மதிக்காமல் ஆளுநர்கள் மூலம் தனது ஆட்சியை பா.ஜ.க. நடத்த முற்படுகிறது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகவன் பகவத், மத்திய அரசின் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்துப் பேசினார். தில்லியில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்துப் பேசினார். எந்த அதிகாரத்தில் அவர் இவர்களையெல்லாம் அழைத்துப் பேசினார்? இவர்கள் அந்தக் கூட்டத்தில் எப்படிக் கலந்துகொண்டார்கள்? என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை இல்லை.
ஜனநாயகப் பாதையிலிருந்து சர்வாதிகாரப் பாதைக்கு நாடு திருப்பப்படுகிறது என்பதன் அறிகுறிதான் இந்தப் போக்காகும். ஜனநாயக முற்போக்கு சக்திகள் இதற்கு எதிராக அணிதிரள வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.