மாணவி அனிதாவின் துயர முடிவை கருத்தில் கொண்டும், மருத்துவக் கனவுடன் இருக்கும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இலவச 'நீட்' பயிற்சி மையங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நடவடிக்கையை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும். இது ஏற்கெனவே பிளஸ் 2 முடித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமின்றி, தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் உளவியல் ரீதியில் தைரியத்தை அளிக்கும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகளான அனிதா, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேரும் கனவுடன் 'நீட்' தகுதித் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போராடித் தோற்றார். நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவச் சேர்க்கை நடைபெற்றதால், அனிதாவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்காமல் போனது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவர் தற்கொலை செய்துகொண்டார். இவருடைய மரணம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவரைப் போல, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்காத மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, சி.பி.எஸ்.இ. மாணவர்களில் பெரும்பாலானோர் 9 -ஆம் வகுப்பு முதல் தனியார் பயிற்சி மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கான தனிப் பயிற்சி எடுத்து வரும் நிலையில், தமிழக அரசு, மாநில பாடத் திட்டத்தை தரம் உயர்த்துவது மட்டும் போதுமா என்ற கேள்வியும் எழுகிறது. குறைந்தபட்சம் ரூ.1 லட்சம், ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் பயிற்சி மையங்களுக்கு ஏழை மாணவர்கள் செல்வது என்பதும் இயலாத காரியம். எனவே, ஏற்கெனவே அதிக மதிப்பெண்களுடன் பிளஸ் 2 முடித்துள்ள ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், தற்போது படித்து வரும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், போட்டித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியை அரசு வழங்க வேண்டும். இது அவர்களுக்கு மனரீதியில் ஊக்கத்தையும், தைரியத்தையும் அளிக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி: அனிதா தற்கொலையை, அரசியல்வாதிகள் தேவையின்றி அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். கல்வியில் அரசியல் கூடாது. அதிக மதிப்பெண் பெற்ற அனிதா தற்கொலை செய்துகொண்டது தவறான செயல். எம்.பி.பி.எஸ். போல நல்ல படிப்புகள் ஏராளம் உள்ளன. இதற்காக நீட் வேண்டாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நீட் என்பது தற்போது வந்ததல்ல. 5 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சியின்போதே கொண்டுவரப்பட்டது. அப்போதே தமிழக அரசு சுதாரித்துக்கொண்டு தமிழக மாணவர்களைத் தயார் செய்யும் நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். இருந்தபோதும், இப்போது காலம் தாழ்த்தி பாடத் திட்டத்தை மேம்படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. அதோடு நின்றுவிடாமல், மாவட்ட வாரியாக இலவச நீட் பயிற்சி மையங்களை உருவாக்கி, அனைத்து தரப்பு மாணவர்களும் பயன்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் கூறியது: 'நீட்' தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், பாடத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த தரம் உயர்த்தப்பட்ட பாடத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும். அவ்வாறு நடைமுறைக்கு வந்தாலும், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தனிப் பயிற்சி என்பது மிக அவசியம்.
எனவே, 2017 -இல் அதிக மதிப்பெண்களுடன் பிளஸ் 2 முடித்து மருத்துவக் கனவுடன் வெளிவந்த ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், தற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் உடனடி நடவடிக்கையாக இலவச 'நீட்' பயிற்சி மையங்களை அரசு உருவாக்குவது மிக அவசியம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


