சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எங்கள் ஆட்சி

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்த வழியில், மக்களின் தேவையை உணர்ந்து அதிமுக ஆட்சி நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

News image
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் மற்றும் அமைச்சர்கள்.
Updated On :29 ஜனவரி 2024, 4:48 pm

DIN

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்த வழியில், மக்களின் தேவையை உணர்ந்து அதிமுக ஆட்சி நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த தச்சூர் அருகே உள்ள பஞ்செட்டி பகுதியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் பிரித்து, உருவாக்கப்பட்டது. அப்போது முதல், இந்த மாவட்டம் தொழில்துறை, விவசாயத்தில் பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளது.
நூற்றாண்டு விழா காணும் அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், அறிஞர் அண்ணாவிடம் கற்ற நாகரிகத்தின் காரணமாக தமிழர் நலன், தமிழக நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டார். அண்ணாவின் கருத்துகளை எல்லாம் திரைப்படங்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு சென்றார் எம்ஜிஆர். மேலும், கட்சி, கொடியின் பெயரில் அண்ணாவை வைத்து, அவரது புகழை உலகமறியச் செய்துள்ளார்.
எம்ஜிஆர் சமதர்மவாதி, சமத்துவக் கொள்கையைப் பின்பற்றியவர். அவரது ஆட்சிக் காலத்தில் ஏழைகள் முன்னேறியுள்ளனர். அவர் அனைவரையும் ஒருசேர பார்த்தவர், உழைப்பை மதித்தவர். 1978-இல் திருச்சியில் பாலம் திறந்தபோது, அதனைக் கட்டிய கொத்தனாரை வைத்தும், கிண்டி சுரங்கப் பாதையை அதனைக் கட்டிய பொறியாளரைக் கொண்டு திறந்தது இதற்கு உதாரணம். அதேபோல், எம்ஜிஆர் உதவி புரிவதில் ஈடு இணையற்றவர் என்று புகழாரம் சூட்டினார்.
இதைத்தொடர்ந்து அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் குறிப்பிட்டு பேசினார். அப்போது, அவர் கூறுகையில், "அடித்தட்டு மக்களுக்கே பிறரது தேவை புரியும். நானும் ஏழ்மையைத் தாண்டி வந்துள்ளதால், ஏழை மக்களின் நிலையை உணர்ந்து ஆட்சி நடத்துகிறேன். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, அவருக்கு பிறகு ஜெயலலிதா தான் என்பதை கட்சியினருக்கு உணர்த்தியிருந்தார். ஆனால், ஜெயலலிதா அப்படி யாரையும் குறிப்பிடவில்லை. இதற்கு காரணம் அதிமுகவில் அடிமட்ட தொண்டன் கூட பெரிய பொறுப்புக்கு வரமுடியும். அதற்கான தகுதி அனைத்துத் தொண்டர்களுக்கும் உண்டு.
கடந்த 2015-இல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, செப்டம்பர் 9, 10 ஆகிய இருநாள்கள் உலக முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தினார். அதன்மூலம் 9 நாடுகளில் இருந்து 1,200 அயல்நாட்டு நிறுவனங்கள், 5,000 இந்திய நிறுவனங்கள் மூலம் ரூ. 2 லட்சத்து 42ஆயிரத்து,170 கோடி முதலீட்டை தமிழகத்துக்குப் பெற்று தந்துள்ளார்.
இதுவரை ரூ.68,832 கோடி அளவிலான முதலீட்டில் தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 76,000 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். எஞ்சிய முதலீட்டுத் திட்டங்களை விரைவில் நிறைவேற்றுவதோடு, அடுத்த ஆண்டில் மீண்டும் உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழகத்தில் நடத்த அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஆட்சி: இதைத்தொடர்ந்து, கடந்த 6 ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார். அப்போது, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்த வழியில் மக்களின் தேவையை உணர்ந்து எங்களின் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா இணைந்து இந்த ஆட்சியைக் காப்பாற்றும். இந்த ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்கள் இந்த ஆட்சியைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றார்.
விழாவுக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருவள்ளூர் எம்.பி., வேணுகோபால், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்றார்.
எம்எல்ஏக்கள் பி.எம்.நரசிம்மன் (திருத்தணி), சிறுணியம் பி.பலராமன் (பொன்னேரி), கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி) ஆகியோர் தொடக்கவுரையாற்றினர்.
விழா தொடங்குவதற்கு முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. செய்தி - மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் வாழ்க்கை, வரலாற்று புகைப்படக் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நன்றி கூறினார்.

"குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது'

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அவர் மேலும் பேசியதாவது: அன்பால், பாசத்தால், பண்பால், ஈகை குணத்தால் தமிழக மக்களின் அபிமானத்தைப் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். அவரது ஆட்சியை ஜெயலலிதா கட்டிக்காத்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என ஜெயலலிதா விரும்பினார். தலைவியின் ஆசையை நிறைவேற்றி வரும் பணியை தற்போது நாங்கள் செய்து வருகிறோம். மக்களுக்காக உழைக்காமலேயே, மக்களை சந்திக்காமலேயே சிலர் பதவிக்கு வரப் பார்க்கின்றனர். குறுக்கு வழியில் தமிழகத்தை ஆள துடிப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புனித பாதையை பார்த்து வளர்ந்த அதிமுகவினர், இந்தச் செயலில் ஈடுபடுபவர்களை பார்த்துக் கொள்வார்கள். குடும்ப ஆட்சியை எதிர்த்து வந்த நிலையில், மக்களின் விருப்பம் நிறைவேறிய சூழலில் அவர்கள் (மக்கள்) விருப்பப்படி நாங்கள் இணைந்து, செயல்பட்டு வருகிறோம்.
இரட்டை இலையில் ஒரு இலை எம்ஜிஆர், இன்னொரு இலை ஜெயலலிதா. இந்த ஆட்சியை ஜெயலலிதா கூறியதுபோல் நூறாண்டு ஆட்சியாக மாற்ற மக்கள் சக்தியை கொண்டு காப்போம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.