18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.


சென்னை: தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.
உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதங்களை முன் வைக்கின்றனர்.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் தரப்பில் வழக்குரைஞர் ராகேஷ் திவேதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் சார்பில் அரிமா சுந்தரம் ஆஜராகியுள்ளார். அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித் ஆகியோர் ஆஜராகினர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தனித்தனியாக மனு தாக்கல் செய்த போதும், 18 மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்துமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராமசாமி, 18 மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்ததை அடுத்து, இவர்கள் சார்பில் துஷ்யந்த் தவே மற்றும் சல்மான் குர்ஷித் ஆஜராகி வாதிடுகிறார்கள்.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனிடையே, கம்பம் தொகுதி எம்எல்ஏ எஸ்.டி.கே.ஜக்கையன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை ஆதரிப்பதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் திங்கள்கிழமை (செப்.18) உத்தரவிட்டார். 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் உள்பட 18 பேரவை உறுப்பினர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.ஆர்.ராமன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்பு ஆஜராகி, 'தகுதி நீக்கத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்' எனக் கோரினார்.
அப்போது மனுவைத் தாக்கல் செய்யக் கூறிய நீதிபதி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை புதன்கிழமை (செப்.20) நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த மனுவுடன் சேர்த்து இந்த மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
தகுதி நீக்கத்தை ரத்து செய்யக் கோரிக்கை: இதையடுத்து வெற்றிவேல் உள்பட 18 பேர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் 'நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க சில ஆவணங்களை தர வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் கோரினோம். அந்த ஆவணங்களை தந்தால் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறோம். ஆனால், தாங்கள் கேட்ட ஆவணங்களை பேரவைத் தலைவர் அளிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் பேரவைத் தலைவரின் தகுதி நீக்க நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கது அல்ல.
அவரது நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தங்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது தவறான முன்னுதாரணம். எனவே, தங்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...