ஜெயலலிதா மரணம் குறித்த விமர்சனம் தேவையற்றது: அமைச்சர் செல்லூர் கே.ராஜு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விமர்சனம் தேவையற்றது என்று, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்த விமர்சனம் தேவையற்றது: அமைச்சர் செல்லூர் கே.ராஜு
Published on
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விமர்சனம் தேவையற்றது என்று, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிகழ்ச்சியில் புதன்கிழமை கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.7ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு கடன் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நடப்பு ஆண்டில் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை ரூ.1,552 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 
மேலும், கடந்த ஆண்டு வறட்சி ஏற்பட்டதால் நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.841 கோடி கூடுதலாக கடன் வழங்கியுள்ளோம். அண்மையில் நடைபெற்ற 32 மாவட்ட கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு தங்குதடையின்றி கடன் வழங்க உத்தரவிட்டுள்ளோம். 
மேலும், 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கு கடன் வழங்க அறிவுறுத்தியுள்ளோம். இதில் தவறு நடப்பதைச் சுட்டிகாட்டினால் சம்பந்தப்பட்ட சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பு ஆண்டில் பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் பெய்துள்ளது. எனவே, விவசாயிகளுக்கு கிடைக்கக் கூடிய கடன்கள் தங்கு தடையின்றி உரிய காலத்தில் கிடைக்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது உரம் வாங்குவதற்காக டான்பெட் நிறுவனத்துக்கு ரூ.150 கோடி வட்டியில்லா கடன் வழங்கியுள்ளார். அந்த தொகையைக் கொண்டு அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் வாங்கி போதுமான அளவு இருப்பு வைத்துள்ளோம். 
பயிர்க் காப்பீடு நிறுவனங்களை மத்திய அரசுதான் நியமித்துள்ளது. காப்பீட்டுத் தொகையை சரியாக கொடுக்காத நிறுவனங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முதல்வர் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். விரைவில் அனைவருக்கும் பயிர்க் காப்பீடு கிடைக்கும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு தாயாக இருந்தவர். அவரை இழந்து நாங்கள் தவித்து வருகிறோம். அவருடைய மருத்துவச் செலவு குறித்து பேசுவது தவறு. மேலும், அவரை பற்றி நான் எந்த விமர்சனமும் செய்வதில்லை. அவரது மரணம் குறித்த விமர்சனம் தேவையற்றது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com