பசுமைப் பணியில் ஆர்வமுடன் இளைஞர்கள்! 5 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்க இலக்கு

இயற்கையோடு இயைந்து வாழும் வகையில், பசுமைப் பணியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
விதைப் பந்துகளை உருவாக்கிய மாணவர் குழுவினருடன் பசுமைப் பாதுகாப்பக அமைப்பாளர் ஆர்.கே.முத்துக்குமரன்
விதைப் பந்துகளை உருவாக்கிய மாணவர் குழுவினருடன் பசுமைப் பாதுகாப்பக அமைப்பாளர் ஆர்.கே.முத்துக்குமரன்

இயற்கையோடு இயைந்து வாழும் வகையில், பசுமைப் பணியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
140 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி, ஒரு சொட்டு நீருக்கான முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒருசேர ஏற்படுத்திவிட்டது. வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்ட நிலையில், குடிநீர்த் தட்டுப்பாடு அன்றாட செய்திகளில் ஒன்றாக மாறிவிட்டது. இது, சுற்றுச்சூழல் பிரச்னையில் எதையாவது செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை ஒவ்வொருவரின் மனத்திலும் ஏற்படுத்திவிட்டது.
சுற்றுச்சூழல் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஓமலூரைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, இளைஞர் சக்தியை சரியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதற்கென ஓமலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து பசுமைப் பாதுகாப்பகம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் மூலம், முற்றிலும் இலவசமாக விதைப் பந்துகளை உருவாக்கி இளைஞர்கள் வாயிலாக வறட்சியான இடங்களில் தூவுவதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, ஓமலூர் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டியில் விதைப் பந்துகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. வேங்கை, வேம்பு, நிலவேம்பு, பாதாம், பூவரசு, எட்டி, கடுக்காய், சந்தனம் மற்றும் புங்கை மர விதைகள், களிமண், எரு, தென்னை நார் கொண்டு விதைப்பந்துகளாக உருவாக்கப்பட்டன. இந்தப் பணிகளில், தற்போது கோடை விடுமுறைக்காக வீட்டில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். 60 பேர் கொண்ட குழுவினர் ஒன்றிணைந்து, ஒரே நாளில் 15 ஆயிரம் விதைப் பந்துகளை உருவாக்கினர்.
இதுகுறித்து, பசுமைப் பாதுகாப்பகத்தின் அமைப்பாளரும், இயற்கை ஆர்வலருமான ஆர்.கே.முத்துக்குமரன் கூறியது:
சுற்றுச்சூழல் பிரச்னைக்கு அதிக அளவில் மரங்களை நடுவதன் மூலமே உரிய தீர்வு காண முடியும். கோடை முடிந்து பருவ மழை தொடங்க உள்ளதைக் கருத்தில் கொண்டு, விதைப் பந்துகளை உருவாக்கி மலைப் பகுதி உள்ளிட்ட வறட்சியான இடங்களில் தூவுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தூவப்படும் விதைப் பந்துகள் மழையின்போது, கரைந்து விடுவதுடன், மரங்கள் தோன்றவும் காரணமாக இருக்கும்.
இந்தப் பணியில் இளைஞர்கள் அதிக ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர். இளைஞர்களின் பங்கேற்பின் காரணமாக, இன்னும் இரு வாரங்களில் சுமார் 5 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி, சேலம் மாவட்டம் முழுவதும் இளைஞர்களிடம் விநியோகிக்க உள்ளோம் என்றார் அவர்.
கடும் கோடை மற்றும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து செயல்பட்டால் நிச்சயமாக, சுற்றுச்சூழல் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

களிமண் மற்றும் எருவைக் கொண்டு விதைப் பந்துகளைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com