ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

98%அரசுப் பேருந்துகள் இயக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வியாழக்கிழமை நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தின்போது மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகப்

News image

சென்னை கோயம்பேட்டிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வியாழக்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள்.

Updated On :6 ஏப்ரல் 2018, 1:27 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வியாழக்கிழமை நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தின்போது மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் 98 சதவீதம் அளவுக்கு இயக்கப்பட்டதாக அரசுப் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தின. இதற்கு பல அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி போன்ற போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
முழுமையாகப் பேருந்துகள் இயங்க நடவடிக்கை: பணிக்குச் செல்வோர், பொதுமக்கள், மாணவர்கள் எவ்வித சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதற்காக முழுமையான அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதன்கிழமை அறிவித்தார். அதைத் தொடர்ந்து சில தொழிலாளர்களுக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்ட வார விடுமுறை, பணி ஓய்வு போன்றவை ரத்து செய்யப்பட்டு அனைத்துத் தொழிலாளர்களும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
மாநகரப் பேருந்துகள் இயக்கம்: வியாழக்கிழமை காலை முதல் அரசுப் பேருந்துகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின. போராட்டத்தில் ஈடுபட்டோர் ஆங்காங்கே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஒரு சில இடங்களில் நடந்த கல் வீச்சு சம்பவங்களில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் சேதமடைந்தன.
போக்குவரத்து சீர்குலைவு: அண்ணாசாலை, வேப்பேரி, எழும்பூர், காசிமேடு, கோயம்பேடு, வேளச்சேரி போன்ற இடங்களில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரைச் சாலையில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியே செல்லும் பேருந்துகள் அனைத்தும் அண்ணா சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டன. பின்னர் நிலைமை சீரானதும் கடற்கரைச் சாலை வழியே மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் போராட்டக்காரர்கள் பேருந்தில் இருந்த பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்ட சம்பவங்களும் அரங்கேறின.
பயணிகள் எண்ணிக்கை குறைவு: முழு அடைப்புப் போராட்டம் தொடர்பான தகவல் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்றடைந்ததால், பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும் பேருந்துகள் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து இயக்கப்பட்டன.
ஆனால் கோயம்பேடு, பாரிமுனை, திருவொற்றியூர், வேளச்சேரி, திருவான்மியூர், பெசன்ட்நகர், கிண்டி, மாதவரம், அம்பத்தூர், ஆவடி போன்ற பேருந்து நிலையங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்கிடந்தன.
அரசுப் போக்குவரத்து பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. மாநிலம் முழுவதும் 98 சதவீதப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் எவ்விதத் தடையுமின்றி இயக்கப்பட்டன.
புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்: ஆனால் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் தீவிரமாக இருந்ததால் சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் பேருந்துகள் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை நிறுத்தப்பட்டு பின்னர் இயக்கப்பட்டன. அதேபோல், தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் தமிழக எல்லையான ஓசூர் வரையில் மட்டும் இயக்கப்பட்டது. மாலை 6 மணிக்குப் பிறகு இப்பகுதிகளுக்கும் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டன என தெரிவித்தனர்.
ஷேர் ஆட்டோ, டாக்ஸிகள் இயக்கம்: சென்னையில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள் வழக்கம்போல் இயங்கின. இவற்றில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்பட்டதும் பயணிகளுக்கு ஆறுதலாக அமைந்தது.
லாரிகள் ஓடவில்லை: முழு அடைப்புப் போராட்டத்துக்கு அனைத்து லாரி உரிமையாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்ததால் சென்னை மாநகரில் லாரிகள் எதுவும் மாலை 5 மணி வரை இயக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.