நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

எதிர்க்கட்சிகளின் அர்த்தமற்ற சவால்களை பாஜக சந்திக்கும்: தமிழிசை சௌந்தரராஜன்

எதிர்க் கட்சிகளின் அர்த்தமற்ற எந்தவொரு எதிர்மறை சவால்களையும் பாஜக சந்திக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

News image

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற கன்யா பூஜையில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:09 am IST

எதிர்க் கட்சிகளின் அர்த்தமற்ற எந்தவொரு எதிர்மறை சவால்களையும் பாஜக சந்திக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ஏப்ரல் 9 முதல் 18 ஆம் தேதி வரை உலக நன்மைக்கென ஹோமம் உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. இதன் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீ கமலாத்மிகா தேவி சிறப்பு ஹோமம் நடைபெற்றது. 
இதில், கலந்து கொள்ள தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை காமாட்சியம்மன் கோயிலுக்கு வருகை புரிந்தார். அவரை, கோயில் ஸ்தானிகர் நடராஜ சாஸ்திரிகள், ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரிகள் ஆகியோர் வரவேற்று, யாக மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். 
அங்கு, அவர் யாகம், கன்யா பூஜை ஆகியவற்றில் கலந்துகொண்டார். பின்னர், காமாட்சியம்மன் சந்நிதிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். 
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல் சூழல் உருவாகியுள்ளது. ஆக்கப்பூர்வமான அரசியலை விட எதிர்மறை அரசியல் மிகவும் வருத்தமடையச் செய்கிறது. தற்போது, எதிர்க்கட்சிகள் எதிர்மறை கருத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும், நிகழ்வைத் தேடி சென்று போராட்டம் நடத்தி, பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வரவேண்டும் எனவும் அரசியல் செய்கின்றனர். காவிரி விவகாரத்தில் சட்ட ரீதியாக ஒரு நகர்வு உள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றமும் இரு மாநிலங்களையும் அமைதி காக்குமாறு கூறியுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் 3-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. 
ஆனால், நாள்தோறும் போராடுவதற்கு ஏதேனும் பிரச்னை கிடைக்காதா எனும் வகையில்தான் தமிழக அரசியல் தற்போது உள்ளது. காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளால் காவிரி விவகாரம் கடந்த 50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதனை பாஜக அரசு விரைவுப்படுத்தியுள்ளது. எந்த கட்சிகள் கிடப்பில் போட்டனவோ, அதே காங்கிரஸ், திமுக கட்சியினர் காவிரிக்காக போராடுவது வேடிக்கையாக உள்ளது. நிர்மலாதேவி விவகாரம், சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
விசாரணை நடத்தப்படுவதில் நம்பகத்தன்மை வேண்டும். மேலும், விசாரணை தொடங்கி, குற்றம் நிரூபணம் செய்ய கால அவகாசம் வேண்டும். ஆனால், அதற்கு முன்னரே தீர்வு வேண்டும் என்பது முறையல்ல. ஆளுநருக்கு கருப்புக்கொடி காண்பித்து பின்பு அவரிடமே சென்று கோரிக்கை வைக்கின்றனர். பாஜக பெண் நிர்வாகியையும், நிர்மலா தேவியையும் இணைத்து தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். 
இது கொடூரமான செயல். எதிர்க்கட்சிகளின் அர்த்தமற்ற எந்தவொரு எதிர்மறை சவால்களையும் பாஜக சந்திக்கும். மேலும், நேர்மறையான, ஆக்கபூர்வமான, வளர்ச்சித்திட்டங்களில் முன்னெடுத்து பாஜக பயணிக்கும் என்பதில் உறுதியுடன் உள்ளோம். அவ்வகையில், எதிர்கட்சிகளின் எதிர்மறை அரசியலை தமிழக மக்கள் புரிந்து கொண்டு நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்றார் அவர். 
ஆளுநர் மாளிகை நிகழ்வை தவறாகக் கொள்ளக் கூடாது
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில் முதன்மையாக உள்ளோம். அவ்வகையில், ஆளுநர் மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் நடந்து கொண்ட விதம், நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது. 
வயது முதிர்ந்தவர் தனது குழந்தைகளிடம் அன்பான முறையில் நடந்து கொண்டதாகவே இருந்தது. பத்திரிகை நண்பர்களை சகோதரத்துவ உணர்வுடனே அணுகி வருகிறோம். ஒருவர் தன்னிடம் எந்த வகையில் பழகுகிறார், அணுகுகிறார் என்று அனைவருக்கும் தெரியும். உணரவும் முடியும். அவ்வகையில், இந்த விஷயத்தில் ஒருவித பாராட்டு உணர்வே உள்ளது. ஆளுநர் மாளிகை நிகழ்வை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதே எனது கோரிக்கை என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.