/

மின்உற்பத்தி, பகிர்மானம் குறித்து 2-ஆவது நாளாக அமைச்சர் பி.தங்கமணி ஆய்வு

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், மின்தேவையைக் கருத்தில்கொண்டு மின்உற்பத்தி, பகிர்மானம் தொடர்பாக சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில்

News image
Updated On :19 ஏப்ரல் 2018, 1:44 am IST

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், மின்தேவையைக் கருத்தில்கொண்டு மின்உற்பத்தி, பகிர்மானம் தொடர்பாக சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி 2-ஆவது நாளாக புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
முதல் நாள் ஆய்வில் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டப் பணிகள் குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்தும் அமைச்சரிடம் மின்வாரியத் தலைவர் விக்ரம் கபூர் விளக்கம் அளித்தார். அத்துடன் மின் உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்தும், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மின் உற்பத்தி, விநியோகம், திட்டமிடுதல், இயக்கம், மின் தொடரமைப்பு, நிதி, ஆகியவை குறித்து இயக்குநர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
2-ஆவது நாளாக புதன்கிழமை, விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை மானியக்கோரிக்கையில் மின்துறை சார்பாக தயாரிக்கப்பட வேண்டிய கொள்கை குறிப்புகள், பின்னர் துறை ரீதியில் வெளியிடப்பட வேண்டிய அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களை தொடங்கி வைப்பது குறித்தும், மின்உற்பத்தி, பகிர்மானம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண் இயக்குநர் எஸ். சண்முகம், இயக்குநர் (உற்பத்தி) டி. வேல்முருகன், இயக்குநர் (திட்டமிடுதல்) எஸ். கீதா, இயக்குநர் (மின் தொடரமைப்பு) டி. செந்தில் வேலன் மற்றும் அனைத்து மாவட்ட தலைமை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.