சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் குழுவில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நீக்கம்: வருவாய்த் துறை உத்தரவு
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாநில அளவிலான உயர்நிலைக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாநில அளவிலான உயர்நிலைக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய்த் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.
மாநிலத்தில் சட்டத்துக்குப் புறம்பான ஆக்கிரமிப்புகளுக்கு பொறுப்பேற்கவும், ஆக்கிரமிப்புகள் தோன்றுவதை கண்காணிக்கவும் மாநில அளவில் வருவாய்த் துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.
மேலும், மாவட்டங்களில் உள்ள வட்டம், கோட்டம், மாவட்ட அளவில் உள்ள அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் குறித்த மனுக்களைத் தீர்வு செய்ய குறை தீர்க்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் பணியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், வரையறுக்கப்பட்ட கால வரம்புக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்யவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழு மாற்றியமைப்பு: இந்த நிலையில், மாநில அளவிலான குழுவை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த மாநில அளவிலான குழுவில், தலைமைச் செயலாளர், வருவாய், சுற்றுச்சூழல் மற்றும் வனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், உள்துறை, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நில நிர்வாக ஆணையரகம் ஆகிய துறைகளின் செயலாளர்கள் அலுவலர் சார் உறுப்பினர்களாக இருந்தனர்.
மேலும், இரண்டு சட்டப் பேரவை உறுப்பினர்கள், சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய ஆறு மாநகராட்சிகள், அம்பத்தூர், திருப்பூர் ஆகிய இரண்டு நகராட்சிகள் ஆகியவற்றில் இருந்து தலா ஒரு உறுப்பினர் வீதம் 10 மக்கள் பிரதிநிதிகள் அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் மாநில அளவிலான குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், மாநில அளவிலான குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக வருவாய்த் துறை அமைச்சர் தொடர்ந்து செயல்படுவார். வருவாய், சுற்றுச்சூழல் மற்றும் வனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், உள்துறை, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நில நிர்வாக ஆணையாளர் ஆகியோர் அலுவல் சார் உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். அதேசமயம் மக்கள் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெறவில்லை.
பணிகள் என்ன? மாநில அளவிலான குழுவானது, வருங்காலங்களில் ஆக்கிரமிப்புகள் தோன்றுவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். மேலும், நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைக் கண்காணிக்கும். மாவட்டங்களில் செயல்படும் கண்காணிப்புக் குழுவின் பணிகளை ஆய்வு செய்யும் நில நிர்வாக ஆணையரின் ஆய்வறிக்கை, மாநில அளவிலான குழுவால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும்.
அரசு புறம்போக்கு நிலங்களில் நிலையான கட்டடங்கள் மூலம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும். மாவட்ட கண்காணிப்புக் குழுவால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஒருமனதாக முடிவெடுக்க முடியாத விஷயங்களை ஆய்வு செய்து இக்குழு முடிவெடுக்கும் என்று தனது உத்தரவில் வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காரணத்தால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முக்கியக் குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. இந்தக் குழுவில் மக்கள் பிரதிநிதிகளையும் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் வகையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவுற்ற பிறகு உரிய உத்தரவுகள் பிறக்கப்படும் என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...