ஜெயலலிதா மரணம் குறித்த உண்மைகளை விரைவில் வெளிக்கொணர வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை விரைவில் வெளிக்கொணர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் கூறினார்.
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை விரைவில் வெளிக்கொணர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் கூறினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனிநபர் விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
தற்போது, சாட்சியளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை செய்து வருகின்றனர். 
அதன்படி, சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனிடம் வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திங்கள்கிழமை குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
நீக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தாக்கல்: இதைத் தொடர்ந்து ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரை நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தோப்பு வெங்கடாச்சலம், கே.பி.முனுசாமி, எம்.பி. மைத்ரேயன், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் உள்ளிட்டோர் குறித்த விவரங்களை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம்.
இதுதொடர்பாக ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதால், இந்த விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர்கள் கண்ணன், ஐயப்பன், முன்னாள் டிஜிபி ராமாநுஜம், ஐபிஎஸ் அதிகாரிகள் தாமரைக்கண்ணன், அம்ரேஷ் புஜாரி, திரிபாதி ஆகியோரிடம் குறுக்கு விசாரணை செய்யத் தேவையில்லை என்றார் ராஜா செந்தூர்பாண்டியன்.
உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்: எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ஆனூர் ஜெகதீசன் ஆணையத்தில் திங்கள்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஜெயலலிதா சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சுயநினைவு இழக்கும் நிலை வரை விட்டதற்கு யார் காரணம்?. மேலும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஆளுநர், அமைச்சர்கள் உள்ளிட்ட யாரையும் பார்க்க விடாமல் தடுத்தது யார்? என்பது போன்ற விஷயங்களை முழுமையாக விசாரித்து விரைவில் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.
சாந்தாஷீலா நாயரிடம் விசாரணை: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரிடம் சிறப்புச் செயலராக இருந்த சாந்தாஷீலா நாயரிடம் நீதிபதி ஆறுமுகசாமி திங்கள்கிழமை சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் ஜெயலலிதா கணக்கு வைத்திருந்தார். இதுதொடர்பாக வங்கியின் மேலாளர் லீலாசெல்வகுமார் ஆணையத்தில் திங்கள்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்ததுடன், ஜெயலலிதா வங்கிக் கணக்கு குறித்த விவரங்களையும் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்.
திவாகரனுக்கு அழைப்பாணை: சசிகலாவின் சகோதரர் திவாகரன் வியாழக்கிழமை (மே 3) ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், ஜெயலலிதாவின் தனி மருத்துவர் சிவகுமார் புதன்கிழமை (மே 2) ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com