தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதில் அக்கறை: முதல்வர்-துணை முதல்வர் உறுதி
தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதில் தமிழக அரசும், அதிமுகவும் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் என்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதில் தமிழக அரசும், அதிமுகவும் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் என்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் இருவரும் கூட்டாக திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களின் நலன் காக்கும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். இருவரின் வழியில் செயல்படும் அரசும், அதிமுக கட்சியும் தொழிலாளர்களின் நலன் காப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த உலகம் உழைப்பாளர்கள்தான் வாழ்கிறது. அதனால் அது, உழைப்பவர்களுக்கே சொந்தமானது என்றும், இத்தகைய பெருமையையும், சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தங்களின் கடின உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
107 தொழிலாளர்களுக்கு நிதி: இதனிடையே, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கை:-
மே தினத்தை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 107 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1.07 கோடி குடும்ப நல நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் வாழ்த்து
மே தினத்தை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (திமுக): நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி உழைக்கும் உழைப்பாளர்களின் பெருமையை உலகெங்கும் உணர்த்திடும் திருநாளே மே தினம். உழைப்பே உயர்வு என்று உழைத்திடும் ஏழைக் குடும்பங்கள் நலம்பெற வேண்டும், வளம் பெற வேண்டும்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடுவது அவசியமாகும்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): நவீன தாராளமயமாக்கல் கொள்கையை முறியடித்து, மாற்றுக்கொள்கையின் அடிப்படையில் முன்னேறவும், மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மையைப் பாதுகாக்கவும் உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டி போராட்டக்களத்தை விரிவாக்கிடவும் இந்த மே நாளில் உறுதியேற்போம்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): இந்தியாவில் என்றுமில்லாத வகையில் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகையச் சூழலில், சுரண்டலற்ற, சாதிமத பேதமற்ற, புதியதோர் உலகம் செய்ய அனைவரும் உறுதி ஏற்போம்.
விஜயகாந்த் (தேமுதிக): அரசும், தொழிலாளர் துறையும், அதிகாரிகளும், சில நிறுவனங்களோடு கைகோர்த்து தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடித்து தொழிலாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் பறிக்கும் நிலை மாற வேண்டும்.
வைகோ (மதிமுக): தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் இந்த மே நாளில் உறுதி ஏற்போம்.
ராமதாஸ் (பாமக): மத்திய அரசும், மாநில அரசும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கின்றன. பணி பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. இது மாற வேண்டும்.
திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): ஒடுக்கப்பட்ட மக்களும் பாட்டாளி வர்க்கமும் ஒன்றிணைவதோடு, மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைத்தால்தான் வகுப்புவாத பேராபத்தை முறியடிக்க முயற்சியில் வெற்றிபெற முடியும்.
ஜி.கே.வாசன் (தமாகா): மத்திய, மாநில அரசுகள் உழைக்கும் தொழிலாளர்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
கி.வீரமணி (திராவிடர் கழகம்): காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான், அவன் காணத் தகுந்தது வறுமையோ, பூணத்தகுந்தது பொறுமையோ என்ற துயர நிலைதான் இன்றும் நீடிக்கிறது. இதனை மாற்றிட உறுதியேற்போம்.
டிடிவி தினகரன் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்): உழைப்பின் பலன் முழுமையாக தொழிலாளர்களைச் சென்றடைவதே ஒரு சிறந்த சமூகத்துக்கான அடையாளம். ஆனால், அப்படிப்பட்ட சமூகமாக தமிழகம் இப்போது திகழ்ந்திடவில்லை.
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): தொழிலாளர்களின் துயரங்களைக் களைய, அவர்களுக்குத் துணை நிற்க வேண்டியது அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் கடமையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...