தனியாரை விரும்பும் வாடிக்கையாளர்கள்; தாமதமாக வழங்கப்படும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் விநியோகம் செய்யப்படுகிறது.
தனியாரை விரும்பும் வாடிக்கையாளர்கள்; தாமதமாக வழங்கப்படும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்!
Updated on
2 min read


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையே குறைந்த கட்டணத் தொகை காரணமாக தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பெறுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறைந்த விலையில் சிறந்த கேபிள்டிவி சேவையை வழங்கும் வகையில், கடந்த 2007-இல் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் நிறுவனத்தின் செயல்பாடு குன்றியது. இதைத் தொடர்ந்து, 2011-இல் ஆட்சிக்கு வந்த பின்னர், செயலிழந்த நிலையில் காணப்பட்ட நிறுவனத்தை புனரமைக்கும் வகையில், ரூ.3 கோடி கடனுதவி அரசால் வழங்கப்பட்டது. மேலும், நிறுவனத்தின் பெயரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் எனவும் பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில், 2011-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கேபிள் டிவி நிறுவன சேவையை தொடக்கி வைத்தார். 

தனியாரை நாடும் பொதுமக்கள் : தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனத்தைத் தவிர, சுமங்கலி கேபிள் விஷன், பாலிமர் தொலைக்காட்சியின் விகே டிஜிட்டல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் செட்டாப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சிகளின் சேவைகளை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் வழக்கமான செட்டாப் பாக்ஸுடன், எச்டி தொழில்நுட்பத்துடன் கூடிய பாக்ஸ்ஸும் வழங்கப்படுகிறது. இன்றைய நிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் எச்டி தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸ் இணைப்பு எனில் உடனடியாக வழங்கப்படுகிறது. வழக்கமான செட்டாப் பாக்ஸ் பெற வேண்டும் எனில் காத்திருக்கும் நிலை உள்ளது.

இந்த நேரத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தைத் தவிர, இதர செட்டாப் பாக்ஸ் சேவை வழங்கும் நிறுவனத்தின் ஒப்பந்தம் பெற்ற கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தங்கள் பகுதியில் தனியார் நிறுவனங்களின் சேவையை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் நிறுவனங்கள் வழங்கும் செட்டாப்பாக்ஸில் சேனல்களின் எண்ணிக்கை, மாத சந்தா, அரசு கேபிளை காட்டிலும் குறைந்து காணப்படுவதால், தனியார் நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸை வாங்க பொதுமக்கள் முன்வருகின்றனர்.

டிஜிட்டல் மயம்: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு 2017இல் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டிஜிட்டல் உரிமம் வழங்கியது. இதற்காக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறை எம்பிஇஜி2 தொழில்நுட்பத்திலிருந்து எம்பிஇஜி4 தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு, இதற்கான கட்டுப்பாட்டு அறை 2017, செப்டம்பர் 1 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டம் அன்றைய தேதியில் தொடங்கி வைக்கப்பட்டது. வாடிக்கையாளர் விண்ணப்பத்தை சந்தாதார்களிடம் வழங்கி, அதன் பின்னர் செட்டாப் பாக்ஸ் வழங்கும் வகையிலும், ஒவ்வொரு இணைப்புக்கும் ரூ. 200 மட்டும் செயலாக்கத் தொகையாக வாங்கிக் கொள்ளவும் அரசு அனுமதியளித்திருந்தது. சேனல்களின் எண்ணிக்கை அடிப்படையில் தொகுப்புக்கு ஏற்றவாறு மாத சந்தா மற்றும் அதற்கான ஜிஎஸ்டியும் வசூலிக்க அந்த நிறுவனம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அந்தந்த பகுதி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமாக செட்டாப் பாக்ஸ் வழங்கும் பணியையும் மேற்கொண்டது. 

5 மாதங்களாக வரவில்லை 
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலமாக திருச்சி மாவட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்க வேண்டியிருந்த நிலையில், கடந்த 5 மாதங்களாக பாக்ஸ் வரவில்லை. தற்போதுதான் வந்துள்ளது. வந்துள்ள 7,000 செட்டாப் பாக்ஸ்களையும் வழங்கும் பணியை சம்பந்தப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமாக மேற்கொண்டு வருகிறோம் என்கின்றனர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com