அறிவிப்புடன் நிற்கும் அணை திட்டங்கள்!

மழை, வெள்ளக் காலங்களில் கொள்ளிடம் வழியே வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தேக்கும் வகையில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட கதவணை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற
அறிவிப்புடன் நிற்கும் அணை திட்டங்கள்!
Updated on
2 min read


திருச்சி: மழை, வெள்ளக் காலங்களில் கொள்ளிடம் வழியே வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தேக்கும் வகையில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட கதவணை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்லாது, கர்நாடகத்தில் ஏற்படும் மழை வெள்ளக் காலங்களில் கொள்ளிடம் ஆற்றை, வெள்ளநீர் வெளியேற்றும் கால்வாயாக பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இதனால், பருவமழைக் காலங்களில் தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரைத் தேக்க வழியின்றி கடலில் கலக்கும் சூழல் உள்ளது. 2005-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது 3.23 லட்சம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆறு வழி வெளியேற்றப்பட்டது. ஒரு கி.மீ. அகலமும் - 160 கி.மீ. நீளமும் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்னும் இதே நிலை தொடர்கிறது.
இந்த வகையில், டெல்டா மாவட்டங்களில் இருந்து மட்டும் பல்வேறு நிலைகளில் கடலில் கலந்து 2006-இல் 42.85 டிஎம்சி, 2007 இல் 64.41 டிஎம்சி, 2008 இல் 78.15 டிஎம்சி, 2009-இல் 65.42 டிஎம்சி தண்ணீர் வீணடிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள். ஆண்டுக்கு சராசரியாக 60 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வருகிறது என்கின்றனர். ஒரு டிஎம்சி நீரை 6 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடிக்கு பயன்படுத்தலாம் என பாசன வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கணக்குப்படி, வீணாகும் நீரை வைத்து கூடுதலாக 3.86 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி ஏற்படுத்த இயலும். பருவமழை பொய்த்துப்போனால் கொள்ளிடம் வறண்டு மணல் குவாரிகளுக்கு மட்டும் விருந்தாகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கொள்ளிடம் ஆற்றின் கொள்ளளவிற்கு தண்ணீரைத் தேக்கிடுவதற்கான முறையான திட்டமிடல் இல்லாததே இதற்குக் காரணம் எனவும் கூறுகின்றனர். மேட்டுர் அணையைப் பராமரிப்பதிலும் போதிய கவனம் செலுத்தாததால் கடந்த 74 ஆண்டுகளில் 29.6 சதவீதம் அளவிற்கு அணையின் கொள்ளளவு குறைந்திருப்பதாகவும் புகார் கூறுகின்றனர்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் கதவணை (தடுப்பணை) கட்ட திட்டமிட்டப்பட்டு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மழைக் காலங்களில் வெள்ளநீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க ரூ.400 கோடியில், கொள்ளிடத்தில் கதவணை கட்டப்படும் என 2014-இல் ஆகஸ்ட் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
கடந்த 2017 செப்டம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிலும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார்.
காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, காவிரியில் தடுப்பணைகள் அமைப்பது, புதிய கதவணைகள் அமைப்பது என பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது. காவிரி கரையில் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன, அதனால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பது குறித்தும் பரிந்துரையில் விளக்கியது. கொள்ளிடம் ஆறு வறண்டுவிடுவதைத் தடுக்க, கீழணைக்கு மேல் 7 கதவணைகள், கீழணைக்கு கீழே 3 கதவணைகள் புதிதாக கட்ட வேண்டும் என்பதும் விவசாயிகளின் நெடுநாளைய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பதே காவிரி விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும், மேட்டூர் அணை நிரம்பிய பிறகு வெளியேற்றும் காவிரி நீரிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை, சேலம் மாவட்டத்தின் வறட்சிப் பகுதிகளுக்கு, திருப்பிவிட்டால் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது அந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ரூ.1,100 கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான திட்டம் தீட்டப்பட்டு பல்வேறு நடைமுறை பிரச்னைகளால் முடங்கியது.
கொள்ளிடத்தில் கதவணையும், காவிரியின் குறுக்கே 17 இடங்களில் தடுப்பணைகளும் கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் கூடுதலாக பாசனம் பெறுவதுடன், புனல் மின்சார உற்பத்திக்கும் வாய்ப்புள்ளது. மீன் வளர்ப்பு, சுற்றுலா, நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளும் உள்ளன என்கின்றனர் நீரியல் வல்லுநர்கள்.
பொதுப் பணித் துறை வட்டாரத்தினர் கூறுகையில், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் 2 அடி உயர கதவணைகள் கட்டும் திட்டம் உள்ளது. இதன் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்தில் 25, திருவாரூர் மாவட்டத்தில் 8, நாகை மாவட்டத்தில் 9 கதவணைகள் ரூ.91.63 கோடி செலவில் கட்டப்படவுள்ளன. இது முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் பாசனப் பரப்பும் அதிகரிக்கும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com