மத்திய அரசுக்கு நெருக்கடி அளித்தவர்களுள், முதன்மையானவர் கருணாநிதி!

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றச் சொல்லி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கலைஞர்  கருணாநிதி  
மத்திய அரசுக்கு நெருக்கடி அளித்தவர்களுள், முதன்மையானவர் கருணாநிதி!

அக்டோபர்  2008, இலங்கை தமிழர் பிரச்னைக்காக...

1956-ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் இலங்கை தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி.

இலங்கைத் தமிழர்களின் நெடுங்காலப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளை முன்னெடுத்தவர் அவர். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமயத்திலும்  இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக நல உரிமை பேரவை சார்பில் பேரணிகள் நடத்த வேண்டுமென்று வலியுறுத்தியவர்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்றும் கூறியவர். இலங்கை தமிழர்களின் பிரச்னையை மக்களிடம் எடுத்துச் செல்வதுடன் தொடர்ந்து நாம் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவோம் என்று வீர முழக்கமிட்டவர். தமிழர்களை காப்பாற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவர் கலைஞர்.
 

மார்ச் 2011 ஐக்கிய முற்போக்கு கூட்டணிலிருந்து விலக முடிவு

ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலக திமுக அரசு முடிவு செய்தது. காரணம் காங்கிரஸ் முதலில் 60 இடங்கள் கேட்டபோது, அதனைத் தர திமுக ஒப்புக் கொண்டது. ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் 63 இடங்கள் வேண்டுமென்றும், அதுவும் தாங்கள் கேட்ட தொகுதிகள் வேண்டும் என்று நிர்பந்தம் செய்தது காங்கிரஸ் அரசு. அதையடுத்து, மார்ச் 6-ம் தேதி காங்கிரஸோடு தன் உறவை முறித்துக் கொண்டு, மத்திய அரசிலிருந்து வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று அறிவித்து, அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தோடு தில்லி செல்வார்கள் என்றும் அறிவித்தது. அகில இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் காங்கிரஸை சிக்கலில் தள்ளியது திமுக.

மே 2012, பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக மாநில விருந்தினர் மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார் கருணாநிதி. அச்சமயம் ஊடகவியலாளர் சந்திப்பில் உரை நிகழ்த்தினார். அதில் தி.மு.க. தனது கொள்கைகளை சமரசம் செய்ய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டால், கூட்டணியை விட்டு விலகி விடக் கூடத் தயங்க மாட்டோம் என்றும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆகஸ்ட் 2013 சேது சமுத்திர திட்டம் - பந்த் 

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றச் சொல்லி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கலைஞர்  கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு ஆகஸ்டு 4 2008 அன்று மாநிலம் தழுவிய ‘பந்த்’ அறிவித்தது. இதை எதிர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக. அதையொட்டி வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவில் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதிக்காவிடில் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி பரிந்துரைக்கவிருப்பதாக உச்சநீதிமன்றம் எச்சரித்தது. ஆனாலும் முன்னரே திட்டமிட்டவாறு அக்டோபர் 1 அன்று ‘சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பந்த் நடத்தி முடித்தது கலைஞர் தலைமையிலான மாநில அரசு.

சர்க்காரியா கமிஷன்

இந்திரா காந்தி 1976 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் கருணாநிதி அரசின் ஊழல்களை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷன் அமைத்தார். அதில் வீராணம் திட்டத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு செய்த ஊழல்கள் குறித்து விசாரித்து அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டன.

அந்த விசாரணை அறிக்கையில் சர்க்காரியா, 1970 ஆம் ஆண்டில் திமுக அரசு வீராணம் திட்டத்தில் அரங்கேற்றியிருந்த நூதனமான ஊழல்களை, ‘விஞ்ஞான ஊழல்’ எனக் குறிப்பிட்டு அம்பலப்படுத்தினார் நீதிபதி சர்க்காரியா. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, வீராணம் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை தனக்கு சகாயமானவர்களுக்கு வழங்கினார் என்பது தான் சர்க்காரியா கமிஷனின் குற்றச்சாட்டு. கருணாநிதி வீராணம் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை தனது மருமகன் முரசொலி மாறனின் நண்பர்களான சத்யநாராயணா சகோதரர்களுக்கு சாதகமாக ஒதுக்கித் தந்தார். இதற்கு பிரதியுபகாரமாக முரசொலி கட்டிடத்தை நிர்மாணிக்க ரூ59,202 அளிக்கப்பட்டதை மாறனே ஒப்புக் கொண்டிருக்கிறார். அதனால்...ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீது கருணாநிதிக்கு எதிராக சர்க்காரியா கமிஷனின் கண்டுபிடிப்புகள் அடிப்படையில் சிபிஐ வழக்குகளை தாக்கல் செய்தது, ஆயினும் சர்க்காரியா கமிஷனில் சமர்பிக்கப் பட்ட அறிக்கைக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் அந்த ஊழலில் இருந்து கருணாநிதி விடுவிக்கப்பட்டார். பின்னர் 1980 -ல் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com