ராஜாஜி அரங்கில் அன்று.. தந்தையான தகவல் அறிந்தும் கடமையைச் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

ஆகஸ்ட் 8ம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றும் கார்த்திக் (32) செல்போனுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த செய்தி  அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகக் கூறியது.
ராஜாஜி அரங்கில் அன்று.. தந்தையான தகவல் அறிந்தும் கடமையைச் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
Updated on
1 min read


ஆகஸ்ட் 8ம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றும் கார்த்திக் (32) செல்போனுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த செய்தி  அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகக் கூறியது.

அதிகாலை 4.30  மணிக்கு செல்போன் மூலம் தனக்கு குழந்தை பிறந்த செய்தியை அறிந்ததும் குழந்தையையும், தாயையும் பார்க்க ஓடோடிச் செல்லவில்லை கார்த்திக்.

ராஜாஜி அரங்கை நோக்கி தனது ஆம்புலன்ஸோடு பணிக்குக் கிளம்பினார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் 5.30 மணிக்கு ராஜாஜி அரங்குக்குக் கொண்டு வரப்பட்டது முதல் நள்ளிரவு வரை கார்த்திக் தனது பணியைத் தொடர்ந்தார்.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டம் நெரிசலாக மாறி 4 பேர் மரணம் அடைந்தனர். சுமார் 60 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டார் கார்த்திக். 

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையின் அவசரகாலப் பிரிவு முழுவதும் காயமடைந்தவர்களால் நிரம்பிவிட்டது. கூட்ட நெரிசலால் அங்கு மேற்கொண்டு காயமடைந்தவர்களைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக நேரத்தை வீணடிக்காமல் ஆம்புலன்ஸை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

தனது பணி அனுபவம் பற்றி அவரே விவரிக்கிறார்.. அதாவது நான் சுமார் 16 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக உள்ளேன். அவசரகாலக்கட்டத்தில் பல முறை பணியாற்றியுள்ளேன். ரயில் விபத்து, இயற்கை பேரிடர்களின் போது அவசர உதவி தேவைப்படுவோரையும், உயிரிழந்த உடல்களையும் கொண்டு சென்றுள்ளேன். ஆனால் ராஜாஜி அரங்கில் எனது பணி அனுபவம் விநோதமானது. அங்கு கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை தேடித் தேடி கண்டுபிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன்.

நோயாளிகளை மட்டுமல்ல... காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அதிகப்படியான மருத்துவர்கள் தேவைப்பட்டதால், அவசரகாலப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களையும் அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று அழைத்து வந்தேன்.

காயமடைந்தவர்கள் முதல் உயிரிழந்த உடல்களை மருத்துவமனையில்  சேர்த்தது வரை இவரது பணி நள்ளிரவு வரை நீடித்தது. பணி முடிந்த பிறகே மருத்துவமனை அதிகாரியிடம் தனக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்தியை கார்த்திக் கூறியிருக்கிறார். உடனடியாக அவரை கிளம்புமாறு அறிவுறுத்திய அதிகாரி வி. ஆனந்த்குமார், அவரது அயராத பணிக்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com