கேரளத்தில் பெய்து வரும் கனமழை, வெள்ளத்தின் காரணமாக அங்கு நீட் பயிற்சி மையங்களில் தங்கிப் படித்து வரும் தமிழக மாணவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரலாறு காணாத கடும் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்புக்கு கேரள மாநிலமே உள்ளாக்கப்பட்டுள்ளது. திருச்சூரில் உள்ள நீட் பயிற்சி மையங்களின் விடுதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். கன மழையினால் ஏற்பட்ட நிலச் சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தங்களது பிள்ளைகளை அழைத்து வர பெற்றோரால் திருச்சூர் செல்ல முடியவில்லை. இதனால் பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மாணவர்களும் பெற்றோரிடம் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, திருச்சூரில் நீட் பயிற்சி மையங்களில் தங்கியுள்ள தமிழக மாணவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.