சாயல்குடி அருகே ரூ.63 கோடியில் சூரிய மின் உற்பத்தி: அமைச்சர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ரூ. 63 கோடியில் அரசின் பங்களிப்புடன் நடைபெறும் சூரிய மின் உற்பத்தி திட்டப் பணிகளை வியாழக்கிழமை தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆய்வு செய்தார்.
சாயல்குடி அருகே உள்ள மாரியூரில் 268 ஏக்கர் பரப்பளவில் 10 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் எம் சி. சம்பத், வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் அதிகம் உள்ளதாலேயே இங்கு அதிகளவில் சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இப்பகுதி மக்களின் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரசு இத்திட்டத்தை அமல்படுத்துகிறது என்றார்.
உடன் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன். திட்ட மேலாண்மை இயக்குநர் பி.இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.