மேட்டூர் அணையிலிருந்து நொடிக்கு 1.65 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், அணையின் உபரிநீர் போக்கி பகுதி வெள்ளக்காடாக காணப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையிலும், கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரிநீர் தொடர்ந்து வருவதால், மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர் இருப்பு 93.95 டி.எம்.சி.: இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து நொடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. மாலையில் நீர்வரத்து நொடிக்கு 1,65,000 கனஅடியாகக் குறைந்தது.
இதனால் நீர் திறப்பும் நொடிக்கு 1.65 லட்சம் கன அடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீர் மட்டம் 120.30 அடியாகவும், நீர் இருப்பு 93.95 டி.எம்.சியாகவும் இருந்தது.
நீர் திறப்பு 1லட்சத்து 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்திருப்பதால், மேட்டூர்-எடப்பாடி சாலையில் இரண்டாவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அனல் மின்நிலையப் பிரிவு சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சிவப்புக் கொடிகள் கட்டப்பட்டு சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் பொறையூர், தெக்கத்திகாடு, ரெட்டியூர், கோல்நாய்க்கன்பட்டி, சங்கிலி முனியப்பன் கோயில் பகுதிகளிலிருந்து மேட்டூர் வந்து செல்லும் பள்ளி மாணவ மாணவியர் கடும் பாதிப்புக்குள்ளானார்கள்.
அனல் மின்நிலையத்தில் சில பணிகள் பாதிப்பு: மேட்டூர் அனல் மின்நிலைய கரி கையாளும் பகுதிக்கு லாரிகள் செல்ல முடியாத காரணத்தால் மேட்டூர் அனல் மின் நிலையத்திலிருந்து சாம்பல் ஏற்றும் பணி தடைபட்டுள்ளது.
உபரி நீர் போக்கி கால்வாய் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உயரழுத்த மின் கம்பம் ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டதால் மின் விபத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரியின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர்.
இதனால் ரெட்டியூர், தாழையூர், நங்கவள்ளி, வனவாசி குடிநீர்த் திட்டங்களுக்கு 6 நாள்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
நீர் வரத்தைப் பொருத்து மீண்டும் மின் இணைப்பு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், இதனால் வீட்டு மின் இணைப்புகள் எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படையினர்: மேட்டூர் காவிரிக் கரையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட கூடுதலாக 50 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் மீட்புப் படையினர் 17 பேர் கொண்ட இரு குழுக்கள் உயிர் காக்கும் சாதனங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தங்கமாபுரிபட்டணம் பகுதியில் தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் குடியிருந்தவர்களை மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் ராமதுரைமுருகன் வியாழக்கிழமை அழைத்துவந்து, நிவாரண மையங்களில் தங்கவைத்தார்.