அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையின் தடுப்புச் சுவர் இடிந்து ஆற்று வெள்ளம் புகுந்ததால், வால்பாறையில் அரசுப் பேருந்து இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறையில் கனமழை காரணமாக புதன்கிழமை இரவு அப்பகுதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையின் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் ஆற்று வெள்ளம் பணிமனைக்குள் புகுந்தது.
உடனடியாக, உள்ளே நிறுத்தப்பட்டிருந்த சுமார் 20 பேருந்துகள் வெளியேற்றப்பட்டன. வெள்ளம் அதிகரித்ததால் அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடி வந்தனர். வியாழக்கிழமை மதியம் வரையும் நீர் வெளியேறாமல் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால், பேருந்துகளுக்கு டீசல் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பொள்ளாச்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் எஸ்டேட் பகுதி மக்கள் வால்பாறை நகருக்கு வர முடியாமல் தவிப்புக்குள்ளாயினர்.
தனியார் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் நிரப்பி பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.