
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறுவரையறை பணிகளை சரி பாருங்கள் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 2016ல் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இன்று வரை தமிழக ஆட்சியாளர்களால் நடத்தப்படாமல் பல்வேறு வழக்குகள் மூலம் இழுத்தடித்து வருகின்றனர். உயர்நீதிமன்றம் பல்வேறு ஆணைகளை பிறப்பித்தும் அவைகளை இன்றைய ஆட்சியாளர்கள் சிறிது கூட மதிக்காமல் தொடர்ந்து தேர்தலை தள்ளிப்போடுவதில் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஏனெனில், உள்ளாட்சி தேர்தல்கள் முறையாக அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டால் தங்களுடைய செல்வாக்கு சரிந்ததை மக்கள் மன்றத்திலே வெளிப்பட்டுவிடும் என்ற அச்சம் மற்றும் தோல்வி பயத்தின் காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் பல்வேறு காரணங்களை சொல்லி சமாளித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மாநிலத் தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டுகள்
மறுவரையறை செய்யப்பட்டு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு சுமார் 22 ஆண்டுகள் கழித்து தற்போது உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டுகள் மறுவரையறை பணிகள் பூகோள ரீதியாகவும், 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகையின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த வார்டுகளின் மறுவரையறை பணியில் எந்த விதத்திலும் வார்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. வார்டுகளின் எல்லைகள் மட்டுமே திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டிலும், வாக்காளர்கள் எண்ணிக்கை சரிசமம் ஆக்கப்படவில்லை. அத்துடன்
வார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை.
புதிய வார்டுகள் பட்டியலில், எந்தெந்த தெருக்கள், எந்தெந்த வார்டுகளில் உள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சிகளில் வாக்காளர் எண்ணிக்கை 15 ஆயிரம், 20 ஆயிரம், 30 ஆயிரம் என்ற மாறுபாட்டுடன் வார்டுகள் திருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வார்டுகளின் மறுவரையறை பணி முடிந்துவிட்டதால் அடுத்த கட்டமாக பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வார்டுகளை சரியாக கண்டறிந்து இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பணியினை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டு இருக்கின்றது.
ஆகவே, மாவட்டத் தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள் தங்களுடைய பகுதிகளுக்குட்பட்ட உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றிற்கான மறுவரையறை பணிகள் செய்யப்பட்ட வார்டுகளின் விபரங்களை மாவட்ட ஆட்சியர் அல்லது சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமோ அல்லது சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக அரசு அச்சகத்தில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி அரசிதழில் வெளியான தமிழக தேர்தல் ஆணையத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளின் மறுவரையான அரசிதழினை பெற்றுக் கொண்டு அவரவர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வார்டு, ஊராட்சி, பேரூர், ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக ஆய்வு செய்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலை சரிபார்த்து, அவைகள் சரியான முறையிலும், பூகோள ரீதியாகவும், தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பிரிக்கப்பட்டிருக்கின்றதா எனவும், அதே போல் பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மக்களுக்கான வார்டுகள் எவை எவை என்பதையும் கண்டறிந்து ஆட்சேபம் ஏதும் இருந்தால் அவைகளை எழுத்து மூலமாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அல்லது இது சம்பந்தமான தேர்தல் அதிகாரிகளிடம் தங்களுடைய ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
அந்த மனுவின் நகலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமைச் செயலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு உடனடியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மாவட்டத் தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மேற்கண்ட இப்பணிகளில் தங்கள் மாவட்டத்தை சார்ந்த அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து இப்பணியினை வெகு துரிதமாக நடத்திடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்டப் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்புக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இப்பணியினையும் மற்றும் சட்டமன்ற வாரியாக நடைபெறவிருக்கின்ற பொதுக்கூட்டங்களையும் முறைமைபடுத்தி நடத்திடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.