கொளத்தூர் கொள்ளை வழக்கு: நாதுராம் உள்ளிட்ட மூவர் மீண்டும் சிறையில் அடைப்பு

சென்னை, கொளத்தூர் கொள்ளை வழக்குத் தொடர்பாக, போலீஸ் காவலில் இருந்த நாதுராம் உள்ளிட்ட மூவரும் மீண்டும் புழல் சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனர்.
Updated on
1 min read

சென்னை, கொளத்தூர் கொள்ளை வழக்குத் தொடர்பாக, போலீஸ் காவலில் இருந்த நாதுராம் உள்ளிட்ட மூவரும் மீண்டும் புழல் சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனர்.
கொளத்தூர், கடப்பா சாலையில் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் முகேஷ் என்பவரின் நகைக் கடையில் மேற்கூரையை கடந்த நவம்பர் 16-ஆம் தேதி துளையிட்டு, மூன்றரை கிலோ தங்க நகைகள், நான்கரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.2.50 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ய ராஜஸ்தான் சென்ற மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், அங்கு நடந்த மோதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார்.
இது தொடர்பாக நாதுராம், அவரது கூட்டாளிகள் தினேஷ் செளத்ரி,பக்தாராம் ஆகியோரை ராஜஸ்தான் போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர். இவர்களை விசாரணைக்காக சென்னை போலீஸார், இரு வாரங்களுக்கு முன்பு இங்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், மூவரிடமும் விசாரணை செய்ய 10 நாள்கள் அனுமதி அளித்து, எழும்பூர் நீதிமன்றம் கடந்த 30ஆம் தேதி உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார், மூவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
தங்க நகைகள் பறிமுதல்: விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில், இரண்டரை கிலோ தங்க நகைகளை, செளகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் அடகுக் கடை வைத்திருக்கும் ஒரு வியாபாரியிடமும், பெங்களூருவில் உள்ள மற்றொரு வியாபாரிடமும் போலீஸார் பறிமுதல் செய்தனர். முன்னதாக நகைகளை பறிமுதல் செய்வதற்காக போலீஸார் நாதுராமையும், அவரது கூட்டாளிகளையும் பெங்களூரு அழைத்துச் சென்றனர். மூன்று பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணை, திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
இதனால் போலீஸ் காவல் முடிவதற்கு 4 நாள்கள் முன்பே, சென்னை எழும்பூர் 13-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நாதுராம், தினேஷ்சௌத்ரி, பக்தாராம் ஆகியோரை நீதித்துறை நடுவர் கோபிநாத் முன் போலீஸார் ஆஜர்படுத்தினர். 
இதையடுத்து நீதித்துறை நடுவர் கோபிநாத், மூவரையும் இம் மாதம் 9-ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com