'தமிழை ஆண்டாள்' கட்டுரைக்குத் தடை கோரிய வழக்கு: வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரைக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி,
Updated on
1 min read

'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரைக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, வழக்குரைஞர்கள் மொஹிதீன் இப்ராகிம், ஜி.பிரபு, பெயிண்டிங் ஒப்பந்ததாரர் விக்டர், மென்பொருள் பொறியாளரும், தமிழ் இலக்கியவாதியுமான கே.வி.எஸ் கண்ணன் ஆகியோர் கூட்டாக தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனைத்து மதங்களும் மனித குலத்தின் ஒற்றுமையைத் தான் போதிக்கின்றன. ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு கோட்பாடு உள்ளது. பேச்சுரிமை என்ற பெயரில் பிறரின் மனதை காயப்படுத்தக் கூடாது. கவிஞர் வைரமுத்து எழுதிய 'தமிழை ஆண்டாள்' கட்டுரையில் கோடிக்கணக்கான மக்கள் வழிபடும் பெண் தெய்வமான ஆண்டாளின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் வகையில் அவதூறான வகையில் சித்திரித்துள்ளார். 12 ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண். இதுதொடர்பாக வைரமுத்து மீது மனுதாரர் கண்ணன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
எனவே இந்தக் கட்டுரையை தடை செய்ய வேண்டும். கவிஞர் வைரமுத்துவின் கட்டுரை அவதூறானது என்ற நிலையில், மாற்று மதக்கடவுளர்கள் குறித்து எதிரான கருத்துகளைக் கூறி வரும் ஹெச்.ராஜாவை வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மயிலை எஸ். சத்யா, 'கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பெண் கடவுளான ஆண்டாள் மீதான அவதூறு நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் தரக்குறைவான கருத்துகள் பதிவிடப்படுகின்றன. எனவே மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேசமயம் அந்த கட்டுரைக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார்.
அப்போது தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, 'எனக்குக் குறைந்த அளவே தமிழ் தெரியும். கட்டுரையை மொழிபெயர்த்து தர முடியுமா?' என்றார். 'ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வது கடினம்' என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மற்றொரு நீதிபதியான அப்துல் குத்தூஸ், 'எனக்குத் தமிழ் இலக்கியம் குறித்துத் தெரியாது. ஆண்டாள் தொடர்பான அடிப்படைத் தகவல்களை இணையத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்று கூறினார். 
மேலும் சமூக ஊடகங்களில் நீதித் துறை குறித்தும் கருத்து தெரிவிக்கப்படுவதாக கூறிய தலைமை நீதிபதி, 'மத ரீதியில் வெளியிடப்படும் கருத்துகள் உணர்ச்சிப்பூர்வமானவை. அதுபோன்ற கருத்துகள் ஒருபோதும் மற்றவர்களைத் துன்புறுத்தக் கூடாது. அவ்வாறு எழக்கூடிய பிரச்னைகள் தடுக்கப்பட வேண்டும். எனக்கு நன்றாகத் தமிழ் தெரியாத காரணத்தால் இந்த வழக்கை நீதிபதி எஸ்.மணிக்குமார் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com