விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு தடை கோரிய வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் (பிப். 9) அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த வன ஒப்பந்ததாரர் டி.ஸ்டாலின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலையை (45சி) அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக வனத் துறையின் ஒப்புதல் பெறாமல் வருவாய்த் துறை அதிகாரிகள் சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த மரங்களுக்கான மதிப்பீடு தயாரித்து வனத் துறை ஒப்புதல் அளித்தால் மட்டுமே மரங்களை வெட்ட முடியும். மரங்கள் குறித்து புவனகிரி, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர்கள் தவறான கணக்கீடும், மதிப்பீடும் செய்துள்ளனர். மேலும், வெட்டப்படும் மரங்களைக் குறைந்த தொகைக்கு வருவாய்த் துறையினர் ஏலம் விட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது. ஏலம் விடுவதற்கு முன்பாக எந்த விதியையும் அதிகாரிகள் கடைப்பிடிக்கவில்லை. எனவே, அந்த வழித்தடத்தில் உள்ள மரங்களை வெட்டத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மரங்கள் வெட்டுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்றாமல் அதிகாரிகள் செயல்படுவதை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த மனு தொடர்பாக வருவாய்த் துறைச் செயலர், சுற்றுச்சூழல் துறைச் செயலர், விழுப்புரம் வன பாதுகாவலர், கடலூர் மாவட்ட ஆட்சியர், கடலூர் மாவட்ட வன அலுவலர், கடலூர் சார் ஆட்சியர், சிதம்பரம், விழுப்புரம் கோட்டாட்சியர்கள், தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் ஆகியோர் வெள்ளிக்கிழமைக்குள் (பிப். 9) பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.