

தமிழகத்தில் நீர்ப் பாசனத் திட்டங்களை செயல்படுத்தாததால் வேளாண்மை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2018-19-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டனர். இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாமக சார்பில் தொடர்ந்து 11-ஆவது ஆண்டாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் தவிர பிற மாநிலங்களில் வேளாண்மைத் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு அம்மாநில அரசுகள் வேளாண்மைத் துறைக்கு என தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வருவதே காரணம்.
தெலங்கானா, ஆந்திரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேளாண்மைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தி அதிக அளவில் நிதி ஒதுக்கி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு நீர்பாசனத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்காததால், தமிழகத்தின் வேளாண்மை வளர்ச்சி என்பது 2016-இல் மைனஸ் 3 சதவீதமும், 2017-இல் மைனஸ் 8 சதவீதம் என குறைந்துகொண்டே வருகிறது.
இதே போல நாட்டின் வேளாண்மை வளர்ச்சி பத்து ஆண்டுகளுக்கு முன்பு 4 சதவீதமாக இருந்தது. இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 3.8 சதவீதமாகவும், தற்போது 1.3 சதவீதமாகவும் உள்ளது.
நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வேளாண்மைத் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் வேளாண்மைத் துறை வளர்ச்சி அடைய வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண்மை சந்தை, நீர்வள மேலாண்மை என நான்கு துறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் மட்டும் அண்டை மாநிலங்களில் குறைந்தபட்சம் ரூ. 25,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மின் விசிறி, கிரைண்டர், தொலைக்காட்சி என இலவசப் பொருள்களை வழங்குவதற்குத்தான் அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது.
பாமக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் புதிதாக 3 வேளாண்மை பல்கலைக்கழகங்கள், 8 வேளாண்மைக் கல்லூரிகள், வேளாண்மைக்கு என சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவற்றை ஏற்படுத்தி 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
மேலும், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் உள்ளிட்ட 20 நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 5 கி.மீ. தொலைவுக்கு ஆறுகளில் ஒரு தடுப்பணை அமைக்கப்படும். இலவச சோலார் இயந்திரங்கள், இடுபொருள்கள் வழங்கப்படும். வேளாண்மைத் துறைக்கு ஏற்ப நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மாற்றியமைக்கப்படும்.
தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு பல அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. 5 ஏரிகள் காணாமல் போய்விட்டன. காவிரிப் பிரச்னை தொடர்பாக தமிழக விவசாயிகளை ஒருங்கிணைத்து பாமக சார்பில் மாட்டு வண்டியில் கோட்டை நோக்கி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.