விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா -18 எனும் சர்வதேச கலை, விளையாட்டு விழா வியாழக்கிழமை (பிப்ரவரி 15) தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. இதில், 25 நாடுகளைச் சேர்ந்த 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட விழாவை இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம்கம்பீர் தொடங்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து, விஐடி பல்கலைக்கழக வேந்தர்ஜி.விசுவநாதன், திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரிவேரா எனும் சர்வதேசஅளவிலான கலை, விளையாட்டு விழா விஐடியில் ஆண்டுதோறும் 4 நாள்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ரிவேரா கலை, விளையாட்டு விழா வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி15) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 18) வரை தொடர்ந்து 4 நாள்கள் நடைபெறுகிறது. இந்
நிகழ்ச்சியில், உள்நாட்டிலிருந்தும், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களிலுள்ள 25-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 400-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
இதில், மாணவ, மாணவிகளுக்காக கிரிக்கெட், ஸ்நூக்கர், நீச்சல், கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், தட களம், மிஸ்டர் ரிவேரா உள்ளிட்ட 16 விதமான விளையாட்டுப் போட்டிகள், நடனம், நாட்டியம், நாடகம், ஓரங்க நாடகம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி, கவிதை, கட்டுரைப் போட்டிகள், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், விவாத அரங்கம், வடிவமைப்பு, குறும்படம் தயாரித்தல் என மொத்தம் 128 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு மொத்தம் ரூ. 20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
தொடக்க நிகழ்ச்சியாக வியாழக்கிழமை காலை 6 மணியளவில் விஐடி மூன்றாவது நுழைவு பகுதியில் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கும் 9.9 கி.மீ. தூர மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 9 மணியளவில் விஐடி திறந்த வெளி விளையாட்டு அரங்கில் ரிவேரா தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கௌதம் கம்பீர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை தொடங்கி வைக்கிறார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், திரையிசை பின்னணி பாடகர்கள் விஜய்பிரகாஷ், சைந்தவி ஷெர்லி சேட்டியா ஆகியோர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்றாம்நாள் நிகழ்ச்சி யாக, திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி, தெலுங்கு பட இயக்குநர் பூரி ஜெகநாத், சாகா, மெகபூபா பட நடிகைகள் பூஜா திவாரியா, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.
தமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும் இந்திய ஆணழகன் பட்டம் பெற்ற தாராசிங்கும் பங்கேற்கிறார்.
இவ்வாண்டு முக்கிய நிகழ்வாக தமிழ் மொழியிலான நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. இதில், "இன்றைய இயக்குநர்' என்ற தலைப்பில் தமிழ் குறும்படம் தயாரிப்பு, இங்க் அண்டு டாக் என்ற தலைப்பில் தமிழ் கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி, தெருக்கூத்து, நாடக போட்டி, தமிழ் பாடல் போட்டி, டென்டு கொட்டா என்ற பெயரில் வினாடிவினா போட்டி, வாய்க்கா தகராறு என்ற தலைப்பில் விவாத போட்டியும் உள்ளிட்ட 7 விதமான போட்டிகள் நடைபெறவுள்ளன என்றார்.
தொடர்ந்து, ரிவேரா மாணவர் குழு உருவாக்கிய விளம்பர போஸ்டர்கள், பனியன்களை ஜி.விசுவநாதன் வெளியிட, அமைப்புக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
கூட்டத்தில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.